‘அக்ஷய் உர்ஜா திவாஸ்’ என்பது பாரதத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சியைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார தினமாக கடந்த 2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 அன்று கொண்டாடப்படுகிறது.
பூமி இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களுக்கும் ஆற்றலே பிரதானம். மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் தங்களின் இருப்பிற்காக, வாழ்விற்காக, உணவுக்காக தங்களின் உழைப்பு ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. ஆனால், மனிதர்கள் மட்டும்தான் ஆற்றல்களை வசதிக்காவும், ஆடம்பரத்திற்காகவும் வரைமுறையின்றிப் பயன்படுத்துகின்றனர்.
கட்டுக்கடங்காத இந்த நுகர்வு வெறி, இயற்கையைச் சுரண்டி வாழும் மோசமான வாழ்க்கை முறைக்கு வித்திடுகிறது. புதைபடிம எரிபொருள் இன்னும் சில ஆண்டுகளில் தீர்ந்து விடக்கூடும் என்ற நிலையில், மாற்று ஆற்றல் குறித்த சிந்தனையை உலக நாடுகள் முடுக்கி விட்டுள்ளன.
புதைபடிம எரிபொருள், மரக்கட்டைகள், விறகு, நீர்,, அணு உள்ளிட்டவைகளால் கிடைப்பது மரபு சார் ஆற்றல்களாகவும் சூரியன், காற்றாலை, கடல் அலை, புவிவெப்பம், உயிரியல் வாயு, உயிரியல் எரிபொருள் ஆற்றல் போன்றவை மரபுசாரா ஆற்றல்களகவும் வகைப்படுத்தப்படுகின்றன.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் வண்ணம் மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதும் அவசியம். அதே நேரம்,புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
சுற்றுச்சூழல் சீர்கேடு, உலகம் வெப்பமயமாதல் ஆகியவை நம்முன் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளன. பூமியை சுற்றுச்சூழல் மாசு அடைவதில் இருந்து காப்பாற்றுவதற்கு பிற நாடுகளை வழிநடத்தும் விதமாக தற்போது பாரதம் செயல்பட ஆரம்பித்துள்ளது.
உலகின் ஒட்டு மொத்த மின் தேவை சராசரியாக 18 டெராவாட். சரிவர திட்டமிட்டு காற்றாலை சுழலிகளை நிறுவினால் இத்தேவையை விட நான்கு மடங்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
நமது மத்திய அரசின் முயற்சியால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் உற்பத்தித்திறன் தற்போது சுமார் 100 ஜிகாவட்டாக உயர்ந்து வருகிறது.
தமிழகம் அதிக அளவு காற்றாலை மின் உற்பத்தி செய்யும் மாநிலம். அதிக அளவிலான காற்றாலைகள் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன.