திருவண்ணாமலையில் மத்திய அரசின் அலிம்கோ (ALIMCO) நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாமில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் அ. நாராயணசுவாமி கலந்துகொண்டு 2,052 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 7 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நாராயணசுவாமி, “நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 12,712 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ரூ. 13.85 கோடி மதிப்பீட்டில் 23.32 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து உள்ளனர். தமிழகத்தில் ரூபாய் 47.92 கோடி மதிப்பீட்டில் 490 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மற்றவர்களை போல மாற்றுத்திறனாளிகளால் சாதிக்க முடியும் என்பர்தை எடுத்துக்காட்ட மத்திய அரசு அவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. வேலைவாய்ப்பு 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது, அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு 5 சதவீதமாக உள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் சாய்தள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் செவித்திறன் கருவி, 219 மருத்துவ மனைகள் நிறுவப்பட்டு 4,170 செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது’ என கூறினார்.