அடுத்தாண்டு ஜனவரியில், ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனம், அதன் கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துஉள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளர்களில் ஒன்றான மாருதி சுசூகி நிறுவனம், 3.50 லட்சம் ரூபாயில் இருந்து, 28 லட்சம் ரூபாய் வரையான விலை இடைவெளியில், சிறிய ரக வாகனங்கள் முதல் ஆடம்பர வாகனங்கள் வரை தயாரித்து வருகிறது. மேலும், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் வரிசையிலும் முன்னிலை வகிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம், இந்நிறுவனம் அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையாக, 1.99 லட்சம் வாகனங்களை பதிவு செய்து இருந்தது.
இந்நிலையில், மாருதி, தற்போது அதன் வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் ஏற்பட்ட செலவு அழுத்தத்தின் காரணமாக, வரும் 2024 ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க, நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இச்செலவுகளை குறைப்பதற்கும், அதிகரிப்பை ஈடுகட்டுவதற்கும், நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், அது சந்தையில் சிறிய விலை ஏற்றத்துக்கு வழிவகுக்கும். மேலும், இந்த விலை உயர்வு, ஒவ்வொரு மாடலை பொருத்து மாறுபடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.