கதிரவனின் உதயம் காணக் காத்திருக்கும் அதிகாலைப் பொழுது. ட்ராக்-சூட்டில் இருந்தநான், வாசலில் அமர்ந்து ஸ்போர்ட்ஸ் ஷூவை அணிந்துகொண்டேன். ‘அதிகபட்சம் அரை மணி நேரம் தான்… குட்டிப்பையன் எழும் முன் வந்துடணும்‘ என்று என் மூளை ஆர்டர் போட்டது. தெருவில் நடந்து, எதிர்ப்புறம் இருந்த பூங்காவில் நுழைந்து, மெதுவாக ஓடத்துவங்கினேன்.
சட்டென விழித்துக்கொண்டேன். ‘அட, கனவு..!‘ என்று வியந்த நொடியில், என்னையறியாமல் புன்சிரிப்பு என்னிதழ்களில் வந்து ஒட்டிக்கொண்டது. மார்பகப்புற்று நோ மற்றும் பெண்களின் உடல் நலனுக்கான விழிப்புணர்வு திரள் ஓட்டமான ’பிங்க்கதானுக்கு’இந்த வருடமும் பெயர்ப்பதிவு செதிருக்கும் நான், அதற்காக புதிய ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கவேண்டும். மேலும், போன வருடம் போல் அல்லாமல், இம்முறை கொஞ்சம் ஓடிப்பழகினால் நல்லது என்றெல்லாம் நேற்றிரவு நினைத்துக் கொண்டிருந்தேன். இதில் பங்கேற்கும் பெண்களுக்கு, முதலாவதா வெற்றிவாகை சூடவேண்டும் என்பது இலக்கு அல்ல ! பெண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மனதளவில் தளர்ந்து விடாமல் அதனை எதிர்த்துப் போராடி வெற்றிகொள்ளலாம் என்று ஊக்கம் அளித்து, ‘சகோதரி ! உன்னுடன் நான் இருக்கிறேன்,
கவலைப்படாதே!!’ என்று ஆறுதல் அளிப்பதும் தான் இதன் பரந்த நோக்கம். நினைக்கும்போது எவ்வளவு நிறைவா உள்ளது! அந்த எண்ணத்தோடு உறங்கச் சென்றதால், ஒருவேளை இப்படி ஒரு கனவு வந்திருக்கலாம்…!‘இன்னைக்கு இந்த இனிய கனவால், அலாரம் சிணுங்கும் முன்பே எழுந்தாச்சே…! தினமும், அதிகாலை இப்படி ஒரு இனிய கனவு வந்து எழுப்பட்டும்’ என்று என்னை நானே வாழ்த்திக்கொண்டு (!) என் வேலைகளை தொடங்கினேன். இனி, அடுத்த நாலரை மணி நேரத்துக்கு, நான் சிறகில்லாமல் பறக்கும் (பரபரக்கும்) பறவை தான்..!
நான், வினோ என்கிற வினோரஞ்சனி. நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் குடும்பத் தலைவி. நான் வேலைக்குச் செல்பவளும் கூட. பின்னே, எனது காலை நேரம் பரபரப்பாகத்தானே இருக்கும்..?!
அலுவலகம் செல்லும் கணவரையும் கல்லூரிக்கும் பள்ளிக்கும் செல்லும் என் மூன்று குழந்தைகளையும் அனுப்பிவிட்டு, வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து, அரக்கப்பரக்க வாயில் கொஞ்சம், லஞ்ச் பாக்ஸில் கொஞ்சம் என அள்ளிப்போட்டுக்கொண்டு, பஸ்ஸை பிடித்து, ஆபீசுக்கு நேரத்துக்குப் போ சேரணுமே என்ற பரபரப்பு காலை நேரங்களில் என்றால், தினந்தோறும் மாலையில் பஸ்ஸில் ஏறியவுடன், இன்றாவது எட்டு மணிக்குள் வீடுபோ சேர்வோமா என்ற சிந்தனை; கவலை என்று கூட சோல்லலாம். மாலை ஐந்தரை மணியாகி விட்டால் எனக்கு ஆபீசில் இருப்புகொள்ளாது – வீட்டின் கேட் திறக்கப்படும் சத்தம் கேட்கும்போதெல்லாம், வருவது அம்மாவாக இருக்குமோ என்று எண்ணி, ஆவலோடு கதவைத் திறந்து எட்டிப்பார்க்கும் என் செல்லங்களின் முகங்கள்தான் என் நினைவெங்கும் நிரம்பியிருக்கும்.
மாலையில், பெரிய பஸ் ஸ்டாண்டுக்கு அடுத்த நிறுத்தத்தில் நான் பஸ் ஏறுவதால், பெரும்பாலும் உட்கார இடம் கிடைக்கும்; சிலநேரம் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், கர்ப்பிணி / வயது முதிர்ந்த பெண்மணி/குழந்தையை கையில் தூக்கிக்கொண்டிருக்கும் பெண் என வருவோருக்கு, எழுந்து, அவர்களை அமரச் செதுவிடுவேன். அதில் சிலர் ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்பார்கள். ‘அது என் சோந்த இடமா என்ன… இதற்கு நன்றி கூறவேண்டாமே’ என்று எனக்கு சோல்லத்தோன்றும். பரவால்லங்க..!” என்பேன்.
தினமும் எனது இந்த ஒன்றரை மணிநேர பஸ் பயணத்தின் போது, காலை நேரங்களில் பெரும்பாலும், பெண்கள் மற்றொருவருடன் பேசியோ, அல்லது அலைபேசியோ பார்ப்பதில்லை. ஆனால், மாலை நேரங்களில், சிலசமயம் தலைவலியோடு, களைத்துத் திரும்பவும் பஸ்ஸில் வருகையில், போனிலோ அல்லது உடன் வரும் பெண்களிடமோ பேசிக்கொண்டே வரும் பெண்களைப்பார்த்தால் இவர்களுக்கு எப்படித்தான் நாள்முழுவதும் வேலை செதுவிட்டு, பஸ்ஸில் வீடு திரும்பும்போதும், பேசிக்கொண்டே வரமுடிகிறது..!” என்று எனக்கு சற்று எரிச்சலா இருக்கும்..!
இன்று, தவிர்க்க முடியாமல் எனது காதில் விழுந்த சில உரையாடல்கள், என்னை மாற்றி யோசிக்க வைத்தது.
நான் பேருந்தில் ஏறியபின், இரண்டாவது நிறுத்தத்தில் இரு பெண்கள் ஏறினர். அதில் ஒருவர் கர்ப்பிணிப்பெண். அமர்ந்திருந்த நான், வழக்கம்போல எழுந்து, அந்த கர்ப்பிணிப் பெண்ணை அமரச் செதேன். அப்பெண்ணுக்கு அது இரண்டாவது குழந்தை என, தன் தோழியுடனான அவரது உரையாடலில் புரிந்தது. அப்பெண் தன் தோழியிடம், ‘காலை டிபனுக்கு, தக்காளி சட்னி செதேன், அதை ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துக்கொடுக்க வேண்டும் என்கிறார் மாமியார். எனக்கோ, நின்று கொண்டே வேலை செவதால், மிகுந்த கால்வலி, ஆறவைத்த தக்காளியோடு, ஃபேனுக்கு கீழே நானும் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். பிறகு ’அவர்’ (கணவர்) தான் அரைத்துக் கொடுத்தார். ‘நீ சாயங்காலம், வீட்டுக்கு வந்தவுடனே, குழந்தைக்கு டின்னர் கொடுக்கணும், அதை விட்டுட்டு, ராத்திரி ஒன்பது மணிக்கு கொடுத்தால் குழந்தை தூங்காமல் என்ன செவாள்..?” என்று மாமியார் கடிந்து கொள்கிறாராம்..!
குழந்தையோ, தன் அம்மா வந்தவுடன் அவரோடு விளையாடி, மடியில் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்து, நேரத்தை போக்குகிறாளாம். நாள் முழுதும் தன் அம்மாவை விட்டு இருக்கும் மூன்று வயதுக் குழந்தை, அப்படித்தானே இருப்பாள் …?! மேலும், அந்த மாமியாரும் முன்பு ஒரு நாளில் தன் மருமகளைப்போல இளம் தாயாகத்தானே இருந்திருப்பார்..?! ஆனால், வேலைக்குப்போகும் மருமகளா இருந்திருக்க மாட்டாரோ…’ என்று எண்ணிக்கொண்டேன்.
‘ஐந்து நிமிஷம் லேட் ஆனாலும், உள்ளே நுழையும் போதே அந்த ஆள், வாட் இஸ் தி டைம்?” என்று முறைக்கிறார், நான் கண்டுக்கறதே இல்லை, நான் பாட்டுக்கு உள்ளே போக்கிட்டே இருப்பேன். ஆமாம், அந்த 9-ம் கிளாஸ் பையன் எவ்வளவு சோன்னாலும் கேட்கறதே இல்லை, நானும் எவ்வளவோ திட்டியும், அட்வைஸ் பண்ணியும் பார்த்துட்டேன்… எது சோன்னாலும் சிரிக்கிறான், அப்போது நமக்கும் கோபம் தானே வரும்..? பொறுப்பில்லாது இருக்கான், படிக்கணும்ங்கற அக்கறையோ பயமோ அவன்கிட்ட கொஞ்சம் கூட இல்ல.. மேடம் வந்து அவன் பேப்பரைப்பார்த்துட்டு, ‘ஏண்டா, ஒரு மூணு கேள்விக்காவது உனக்கு விடை எழுத முடியாதாடா..?’ -ன்னு கேட்கறாங்க, அப்ப ‘கம்’ன்னு அமைதியா, பதிலே சோல்லாம நிக்கறான், இவனையெல்லாம் என்னங்க செயுறது…?’ அடுத்ததா காதில் விழுந்த உரையாடலில், அந்தப்பெண்ணின் புலம்பலை வைத்து அவர் ஒரு பள்ளி ஆசிரியை என்று புரிந்துகொண்டேன்.
அந்த நிமிடமே, ‘டீச்சர் வேலை தான் பெண்களுக்கு சிறந்தது‘ என்று என் அப்பா உட்பட கூறும், நினைக்கும் பெருமக்களே!, அது ஒன்றும் அத்தனை சுலபம் இல்லை. கோடை விடுமுறையை மட்டும் வைத்து ஆசிரியைப் பணி சோகுசானது என்று தயவுசெது நினைக்காதீர்கள் என்று ‘மைக்’ போட்டு கூவ வேண்டும் போல தோன்றியது எனக்கு.
வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக (உரையாடலில் இருந்து புரிந்துகொண்டது) வெளியூரில் உள்ள கோயிலுக்கு செல்லும் தா மற்றும் தம்பியிடம், அலைபேசும் ஒரு சகோதரி… என்னம்மா, எல்லாம் எடுத்து வச்சிட்டியா, 3 புடவை, 2 டவல், சோப்பு, ஒரு பெட்ஷீட் எடுத்துவை, எத்தனை மணிக்கு கிளம்பப்போறீங்க..? சமைச்சிட்டியா.. என்ன சமைச்ச…? பாத்திரம் எல்லாம் கழுவி வச்சிட்டு போம்மா, அவன் எங்க, அவன்கிட்ட போனை குடு..‘ என்று சொல்லிவிட்டு தம்பியிடம்,
அம்மா சோல்றத கேட்டு நடந்துக்கடா, அதை புலம்ப வைக்காத, உனக்காக தானே போறீங்க. உன் ஏடிஎம்கார்டு மறக்காம எடுத்துட்டுப்போ. நாளைக்கு நான் உன் அக்கௌன்ட்ல பணம் போடுவேன், ஆயிரம் ரூபாதான் போடுவேன், உன் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா.. 3 பேன்ட், 3 ஷர்ட் எடுத்து வச்சிக்கோ, என்னது, வெள்ளை டி-ஷர்டா, வேணாம்டா, கோயில்ல அழுக்குபடும்…”
‘அக்கா என்பவள், தன் தம்பி-தங்கைக்கு இன்னொரு தா போன்றவள்’ – என்பது எத்தனை உண்மை! நானும் பள்ளிச் சிறுமியா என் தங்கை, தம்பியை கவனித்துக்கொண்டது எனது நினைவுக்கு வந்தது.
இன்னும் நான்கு நிறுத்தங்களுக்குப் பின்னர் நான் இறங்கவேண்டிய இடம். உட்கார இடம் கிடைத்தது. எனக்கு முன்னாலிருந்த இருக்கையும் காலியாக இருந்ததில், அதில் வந்து அமர்ந்துகொண்ட இரு இளம் பெண்களில் ஒருவர் தன்னோடு வந்தவரிடம், ‘மணமகனுடைய அம்மா-அப்பா, தன் சம்மந்தி வீட்டிலிருந்து அவங்களுக்கு ஏகபோக மரியாதை செயணும்னு எதிர்பார்க்கிறதைப் போல, அவங்களும், பெண்ணுடைய அம்மா-அப்பாவுக்கு சரியான முறையில் மரியாதை கொடுக்கிறது தானே நியாயம்..? பெண் எடுத்ததற்காக அவங்க எப்படி வேணும்னாலும் இருப்பாங்களா..? பெண்ணைக் கொடுத்ததற்காக இவங்க எல்லாத்துக்கும் அமைதியா இருக்கணுமா..?’ என்று ஆதங்கத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்.
இன்று பஸ்ஸில் ஏறியது முதல், நான் கேட்க நேர்ந்த பலவாறான உரையாடல்களை கோர்வையாக சிந்தித்துப் பார்த்தேன். உடனே, பெண்ணுக்கும் இந்த பூமிக்குமான ஒப்பீடு மனதுக்குள் விரிந்தது.
பெண்களுக்கு எத்தனை விதமான பொறுப்புகள்.., அது சார்ந்த மன உளைச்சல்கள்… அவற்றை மீறி, தான் மேற்கொண்ட பணிகளை சிறந்த முறையில் செயவேண்டும் என்ற மன உறுதியோடு, வீட்டுப் பொறுப்புகளையும் கவனித்து, வேலைக்கும் செல்லும் பெண்கள்…! ஒரு நாளும் ஓந்துவிடாமல் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்த பூமிக்கு, பெரிய குறிக்கோளும் லட்சியங்களும் இல்லை; ஆனால், சோர்வின்றி தனக்கான சரியாகப் பயணித்துக்கொண்டே இருக்கிறது ! குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, வேலைக்கும் செல்லும் என் போன்ற நடுத்தர வயதுப்பெண்களும் இப்படித்தான். இவர்களுக்கு பெரிய இலக்குகள் ஏதும் இல்லாதிருக்கலாம், ஆனால், தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை நல்ல முறையில் நிறைவேற்றுவதற்கான சரியான பாதையில் பயணிப்பவர்கள். இது மாரத்தானில் ஓடுவது போல, தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவா எப்போதும் பயணிப்பது! சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமியின் இயக்கமானது, ஒரு கணம் நின்றுவிட்டால் என்னவாகும்..? அதுபோல, பெண் என்பவளின் இயக்கம் இல்லையெனில், அவள் ஏற்றுக்கொண்ட கடமைகளும், பொறுப்புகளும் நிறைவேற்றுவார் இன்றி அப்படியே தேங்கி நின்றுவிடும். பெரும் இலக்குகள் இன்றிப் பயணித்தாலும் நாங்களும் சாதனைப்பெண்கள் தான்!’ என்று தோன்றியது.
டென்டல் காலேஜ், எறங்குங்க…” என்ற கண்டக்டரின் குரல் கேட்டு, சிந்தனைகளில் இருந்து விடுபட்டவளா பஸ்ஸை விட்டு இறங்கினேன். என் செல்லங்களுக்குப் பிடித்த ஆப்பிளும் சாக்லேட் கேக்கும் வாங்கிக்கொண்டு, ‘நாளை என்ன கனவு வந்து என்னை எழுப்பப்போகிறது..?!‘ என எனக்குள் புன்னகைத்துக் கொண்டே வீடு நோக்கி நடந்தேன். டூ
ஊக்கப்பரிசு பெற்ற இக்கதாசிரியர் குடும்பத் தலைவி. ஆங்கிலம் – தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இவர் மொழி பெயர்ப்பாளர். மாற்றுத் திறனாளிகளுக்கு தொண்டு செய்யும் தன்னார்வலர். சுற்றுச்சூழல் ஆர்வலர்.