விலையேற்றத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மானிய விலையில் ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில், கோதுமை மாவு விற்பனையை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. புதுடில்லியில், இதன் விற்பனை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:
பண்டிகை காலங்களை முன்னிட்டு, நுகர்வோருக்கு அதிக விலையில் இருந்து ஆறுதல் அளிக்கும் வகையில் பாரத் ஆட்டா என்ற பெயரில், மத்திய அரசு, மானிய விலையில் கோதுமை மாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மாவு கிலோ 27.50 ரூபாய்க்கு விற்கப்படும். பாரத் ஆட்டா, என்.ஏ.எப்.இ.டி., என்.சி.சி.எப்., மற்றும் கேந்திரிய பந்தர் ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, நாடு முழுதும் 800 நடமாடும் வேன்கள் மற்றும் 2,000க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களின் வாயிலாக விற்பனை செய்யப்படும். தரம் மற்றும் இடத்தைப் பொறுத்து, வெளிசந்தையில் 1 கிலோ ஆட்டா, 36 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அந்த விலையைக் காட்டிலும் பாரத் ஆட்டா விலை குறைவானதாகும்.
கடந்த பிப்ரவரியில் பாரத் ஆட்டா விற்பனையை, சோதனை முயற்சியாக துவக்கி, கிலோ 29.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த முயற்சி வெற்றியடைந்ததையடுத்து, நாடு முழுதும் இதை செயல்படுத்தும் விதமாக 27.50 ரூபாய்க்கு நாடு முழுதும் உள்ள நுகர்வோர்களுக்கு வழங்க முடிவு செய்து, அதன் விற்பனை தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து, கிட்டத்தட்ட 2.50 லட்சம் டன் கோதுமையை, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக கொள்முதல் செய்து, அதை மாவாக மாற்றி, மானிய விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரத் ஆட்டா, நாடு முழுவதும் 800 நடமாடும் வேன்கள், 2,000க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களின் வாயிலாக வழங்கப்படும்