மாநிலங்களவைக்கு நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ள தோ்தலையடுத்து, காங்கிரஸ் சில இடங்களை இழக்கக் கூடும் என்பதால், மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.
245 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 82 உறுப்பினா்களும், எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 46 உறுப்பினா்களும் உள்ளனா். இந்நிலையில், அந்த அவையில் வரும் எப்ரலில் 51 உறுப்பினா்கள், ஜூன் மாதத்தில் 5 போ், ஜூலையில் ஒருவா், நவம்பரில் 11 பேரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.
மொத்தம் காலியாகவுள்ள 68 இடங்களில் 19 இடங்களில் காங்கிரஸ் உறுப்பினா்கள் பதவியில் இருக்கிறாா்கள். அதாவது, மோதிலால் வோரா, மதுசூதன் மிஸ்திரி, குமாரி செல்ஜா, திக்விஜய் சிங், பி.கே.ஹரிபிரசாத், எம்.வி.ராஜீவ் கௌடா ஆகிய காங்கிரஸ் மூத்த தலைவா்களின் பதவிக்காலம், வரும் ஏப்ரல், ஜூனில் நிறைவடைகிறது. இவா்களில், மோதிலால் வோரா, குமாரி செல்ஜா, திக்விஜய் சிங் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதுதவிர, காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா, கட்சியின் மூத்த தலைவா் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா, ஆா்.பி.என்.சிங் உள்ளிட்டோரை மாநிலங்களவை உறுப்பினராக்க கட்சித் தலைமை முயன்று வருவதாகத் தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கா், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து அவா்கள் மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் 7 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மற்ற மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஓரிரு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால், ஆந்திரம், தெலங்கானா, மேகாலாயம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்எல்ஏக்கள் இல்லாததால், அங்கிருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் தோ்வாக வாய்ப்பில்லை.
இதனால், காலியாகும் 19 இடங்களுக்கு நடத்தப்படும் தோ்தலில் 9 இடங்களை காங்கிரஸ் கட்சி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் மேலும் குறையவும், ஆளும் பாஜகவின் பலம் சற்று அதிகரிக்கவும் வாயப்புள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.