ஆளப் பிறந்தவன் ஆண்மகன்தான் என்று இருந்ததை முறியடித்து ஆண்களுக்கு இணையாகவும், அவர்களைவிட ஒருபடி மேலாகவும் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்று சில பெண்ணரசிகளும் தங்கள் திறமைகளையும் காட்டி முத்திரை பதித்துள்ளனர். இவர்களில் இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கரின் பெயர் மராட்டிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியது. இவர் மராட்டிய சாம்ராஜ்யத்தை விழிப்பூட்டி முகலாயர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு எழுச்சி தந்தவர். இவர் கொடுத்த ஆதரவில்தான் மகாஜி ஷிண்டே முன் நின்று மராட்டிய சாம்ராஜ்யத்தை சூழ்ச்சிக்காரர்களின் பிடியிலிருந்து காத்தார். இவர் சிவபெருமானின் தீவிர பக்தை. காசி விஸ்வ நாதர் கோயில் உட்பட பல கோயில்கலை நிர்மாணித்தவர், புனரமைத்தவர் இவர்.
இவரது ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட சாலைகளும் கல்விக்கூடங்களும் மருத்துவமனைகளும் இவர் செய்த பணிகளாக இன்றும் போற்றும் வண்ணம் உள்ளன.இதைத்தவிர, ‘சதுர்தாம்’ என்ற நான்கு ஈஸ்வர வழிபாட்டு இடங்களை அமைத்தது, நாற்பத்தி மூன்று தீர்த்தக் குளங்களை ஏற்படுத்தியது, துவாதசலிங்க க்ஷேத்திரங்கள் என்று 97 வகைப்பட்ட ஆலயங்களை கட்டியது. அக்கோயில்களில் அன்றாட வழிபாடுகள் நடைபெற லட்சக்கணக்கில் வாரி வழங்கியது என சொல்லிக்கொண்டே போகலாம்.
ராமநாத சுவாமிக்கும், காசி விஸ்வநாதருக்கும் அன்றாடம் காசி தீர்த்தமும், கோடி தீர்த்தமும் அபிஷேகங்களுக்கு கொண்டு சேர்ப்பித்த புண்ணியவதி இவர்.இவரின் தர்பார் மண்டபம் 108 ருத்ராட்ச லிங்கம், நவமணிகளின் ஒவ்வொரு ரத்னத்திலும் கட்டை விரல் அளவு சிவலிங்கங்கள், நர்மதை நதியில் இருக்கும் பளிங்குக் கல்லைக் கொண்டு செய்யப்பட்ட பாண லிங்கங்கள் என்று அந்த மண்டபத்தை அப்படியே ஒரு ஈஸ்வர லோகமாக அமைத்தவர்.
பாரதத்தில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோயில்களில் 8 ஜோதிர்லிங்க கோவில்களான காசி விஸ்வநாதர் கோவில், குஜராத்திலுள்ள சோமநாதர் கோயில், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர், உஜ்ஜயினியில் ஓம்காரேஷ்வர், கேதார்நாத் கேதாரேஸ்வர், மகாராஷ்ட்ராவிலுள்ள பீம் சங்கர் கோவில், மகாராஷ்ட்ராவிலுள்ள திரியம்புகேஷ்வர் கோவில், எல்லோரா அருகிலுள்ள கிருஷ்ணேஷ்வர் கோவில் போன்றவை இவரால், தன் சொந்த செலவில் புனரமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி அகல்யா பாய் ஹோல்கரின் பிறந்த தினம் இன்று