உலகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு ஒரு முக்கிய பணியாக கொண்டு சேகரிக்கப்படுகிறது. புதிய கட்டுமானங்கள், கிணறுகள் மற்றும் குளங்களிலெல்லாம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் வந்த வெள்ள நீரை சேமிக்க தவறிவிட்டதாக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தண்ணீர் ஆர்வலர்கள் தங்களுடைய மனக்குமுறலையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த மிகைநீரை சேமிக்க முடியுமா? நாம் என்ன செய்ய வேண்டும்.
உலகளவில் நதிநீர் பங்கீடு மற்றும் நீர்மேலாண்மை திட்டங்களில் சிறந்ததாக போற்றக்கூடிய திட்டம் பாண்டிய நாட்டு நீர் மேலாண்மையே. அவை தொடர்ந்து வந்த அன்னிய ஆக்கிரமிப்பு அரசுகளால் சிதைக்கப்பட்டது. ஆனால், அப்படி சிதைக்கப்படாமல், இன்றளவும் நம் தமிழகத்தை காத்து வரக்கூடிய ஒரே கட்டமைப்பு கல்லணை.
மிகப்பெரிய சேதங்களுக்கு பிறகு தமிழக நிலப்பரப்பையும், மக்களையும், உயிரினங்களையும் காக்க தமிழ் பேரரசன் கரிகாலச்சோழனால் கல்லணை உருவாக்கப்பட்டது. கல்லணையின் பிரதான வாய்க்கால் கொள்ளிடம் ஆகும். இன்று பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு இடையேயும் கொள்ளிடத்தில் சுமார் 5 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றி, கடலில் கொண்டு சேர்க்க முடியும். அந்தவகையில் இன்றைக்கு கர்நாடகாவிலிருந்து வந்த 3 லட்சம் கன அடி தண்ணீர் மற்றும் சுமார் 30 டி.எம்.சி தண்ணீர் பாதுகாப்பாக கொள்ளிடம் வழியாக எந்தவொரு உயிர் சேதமில்லாமலும் பொருளாதார சேதம் இல்லாமலும் கடலில் கலக்க செய்யப்பட்டது. இது தமிழ் பேரரசன் கரிகாலச்சோழன் நமக்கு கொடுத்த மிகப்பெரிய கொடை ஆகும்.
மிகையாக வரக்கூடிய தண்ணீரை பாதுகாப்பாக கடலில் கொண்டு போய் சேர்த்து எந்தவொரு உயிர் சேதமும் இல்லாமல் செய்தோமென பாராட்டிக்கொள்வது சரியா? இந்த தண்ணீரை வேறு எங்கேயும் சேகரித்து வைக்க முடியாதா? தடுப்பணைகள் கட்ட முடியாதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. தடுப்பணைகள் என்பது சாத்தியமில்லை, இதற்கு கொள்ளிடம் பாலத்திற்கு கீழ்கட்டப்பட்ட மணல் தடுப்பு சுவரே சாட்சியாகும். சுமார் 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரும்பொழுது 6 கோடிக்கு மேல் கட்டப்பட்ட தடுப்பு சுவர் உடைந்தது. எதிர்காலத்தில் எவ்வளவு கனஅடி தண்ணீர் வரும் என தெரியாத நிலையில், தடுப்பணை என்பது சாத்தியமற்றதாகும். எனவே கொள்ளிடத்தில் தடுப்பணைகள் வேண்டுமென்பதை சமூக ஆர்வலர்கள் தவிர்க்க வேண்டும். இதனால் அரசுக்கு பொருளாதார இழப்புகள் மட்டுமல்லாமல், உயிரிழப்புகளும், கிராமங்களை தண்ணீரில் மூழ்கடிக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
மேட்டூரிலிருந்து காவிரி கடலில் கலக்கும் வரை இருபுறங்களிலும் உள்ள பிரதான வாய்க்கால்கள், அதன் கிளை வாய்க்கால்கள் மற்றும் இந்த வாய்க்கால்களிலிருந்து தண்ணீர் தரக்கூடிய ஏரி, குளங்கள் இந்த தண்ணீரை கொண்டு நிரப்பலாம் என அரசுக்கு ஆலோசனை சொல்லப்பட்டது. ஆனாலும் இவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரிய சிக்கல் உள்ளது. அதாவது பொதுவாக காவிரியில் 50 ஆயிரம் கனஅடி தண்ணீரும், அதிகமாக வரக்கூடிய தண்ணீர் கொள்ளிடத்திலும் திருப்பி விடப்படுகிறது. அதுபோல் இந்த வாய்க்கால்களில் மொத்த கொள்ளளவானது 300-லிருந்து 500- கனஅடிக்குள் தான் இருக்கும். இதிலிருந்து பிரிந்து குளங்களுக்கு செல்லக்கூடிய தலைப்பு 100-லிருந்து 150 கனஅடிக்குள் இருக்கும். கொள்ளிடத்தில் ஒரு இலட்சம் கனஅடி தண்ணீர் 2 அல்லது 3 நாட்களில் வடிந்துவிடும். இந்த 3 நாட்களில் 100-லிருந்து 200-கனஅடி உள்ள வாய்க்கால்களில் தண்ணீரை செலுத்தி ஏரி, குளங்களை நிரப்ப முடியாது.
வெள்ள நீர் மேலாண்மைக்காக காவிரி பாசனப்பகுதியில் உள்ள சுமார் 1,000 ஏரி, குளங்களில் 300 வரைக்கும் சேகரிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், தற்போதைய 100-லிருந்து 150 கனஅடிக்குள் தலைப்புக்கு இணையாக சுமார் 500-லிருந்து 1,000-கனஅடி தண்ணீர் செல்லக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இவற்றின் மூலமாக கர்நாடகாவிலிருந்து வரக்கூடிய உபரி நீரை முழுமையாக தமிழகம் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே, இதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்து, ஆய்வு செய்து, 2, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மிகை நீரை சேகரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாரதீய கிசான் சங்கம் கேட்டுக் கொள்கிறது. மேலும் காவிரி பாசனப்பகுதியில் நூற்றுகணக்கான நீரேற்று பாசன சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளுக்கு வெள்ள காலத்தில் மின் விபத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் வழங்கப்படுவதில்லை. மின்சாரம் இல்லாமல், தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்ய முடியுமெனில், இதுகுறித்தும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.
வீணாகும் மிகை நீரை சேமிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் உள்ளது. இதனால் தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு அடையும் என தமிழக விவசாயிகள் நம்புகிறார்கள்.
கட்டுரையாளர் :
மாநில செயலாளர், பாரதீய கிசான் சங்கம்.