சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். இது பற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வடதமிழக சேவா பொறுப்பாளர் ராம. ராஜசேகர் அவர்களிடம் விஜயபாரதம் ஆசிரியர் ம. வீரபாகு நேர்காணல்…
இதுவரை…
தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிவாரண பணிகள் பற்றிய முழு விவரம் இன்னும் கிடைக்கவில்லை. கடந்த 10 நாட்களாக சென்னையில் நடைபெற்ற நிவாரண பணிகளில் நான் கலந்து கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் சொல்லும் விவரங்கள் நவம்பர் 20ம் தேதி வரை நடைபெற்ற பணிகள்.
சென்னையில் எவ்வளவு பேர் எத்தனை இடங்களில் பணிகளில் ஈடுபட்டனர்?
55 இடங்களில் 514 ஸ்வயம்சேவகர்கள் (தொண்டர்கள்) நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
உங்கள் நிவாரண பணிகள் எந்தெந்த வகைகளில் இருந்தது?
வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுதல், உணவு, தண்ணீர், மருந்து, பாய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்ற பொருட்களை விநியோகித்தல்.
மீட்புப் பணிகள் குறித்து…
575 பேர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றோம். உள்ளே வாகனங்கள் செல்ல முடியாததால் ஆங்காங்கு இருந்த அயர்னிங் தள்ளுவண்டி, பழ வண்டி போன்றவைகளில் மக்களை உட்கார வைத்து அழைத்து வந்தோம்.
உங்கள் நிவாரண பணிகளில் எத்தனை பயனாளிகள் இருந்தனர்?
மருத்துவம், உணவு பொருட்கள், பாதுகாப்பு என 19,890 பேர் பயனாளிகள் பயன் அடைந்தனர்.
90,240 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. 2000 வீடுகளுக்கு மெழுகுவர்த்தி, தீப்பெட்டி வழங்கப்பட்டன.
மருத்துவ பணிகள் பற்றி குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?
நவம்பர் 21 முதல் புதியதாக ஒரு நடமாடும் மருத்துவ ஊர்தி ஒன்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வருகிறது. அதில் டாக்டர்கள், நர்சுகள் செல்கிறார்கள். குறிப்பாக தொற்று நோய் வராமல் இருக்க முன்னெச்செரிக்கையாக நிலவேம்பு கஷாயத்திற்கு பதிலாக மாத்திரை, மருந்துகளாக வழங்குகிறோம். பெரம்பூர், வில்லிவாக்கம், சிட்கோ நகர், சத்யா நகர், மணலி, கன்னியம்மன் பேட்டை, வியாசர்பாடி போன்ற பகுதிகளில் மருத்துவ ஊர்தி மூலம் மருந்துகள் வழங்கப்பட்டன.
குறிப்பிடத்தக்க அனுபவங்கள்?
* மணலி புதுநகரில் தீயணைப்பு படையினர் பணியில் ஈடுபட்டபோது அவர்களுடன் இணைந்து பணியாற்றினோம்.
* வில்லாபுரம் – சிட்கோ நகர் மற்றும் முடிச்சூர் மண்ணிவாக்கம் பகுதிகளில் ஏரி உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியபோது அங்குள்ள 400க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றோம்.
* முடிச்சூர், மண்ணிவாக்கத்தில் ஒரு மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றோம்.
* மணலி பெரியார் நகரில் 300 குடிசை வீடுகளில் தண்ணீரில் தத்தளித்தபோது வீடு வீடாகச் சென்று உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டது..
* அதிமுக எம்.எல்.ஏ. மாதவரம் மூர்த்தி நமது நிவாரண மையத்திற்கு வந்து நமது பணிகள் குறித்து பாராட்டினார்.