மலையில் தீபம் மக்கள் கனவு

ராமபிரான் முடிசூடுவார் என்று மகிழ்ச்சிப் பெருக்கில் இருந்த அயோத்தி மக்களுக்கு வாய்த்த சதிகார கூனி மந்தரை போல வந்து சேர்ந்துள்ளது நாத்திக திமுக அரசு. தீபம் ஏற்றுவது குறித்த வழக்கை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாம். “கோயிலில் வழக்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று திருவாய் மலர்ந்தார் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. இதன்மூலம் தி.மு.க அரசியலில் சிக்கலை சந்திக்கிறது. காரணம், இரு நீதிபதிகள் அமர்வு தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து தமிழகமெங்கும் ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள், முருக பக்தர்கள் மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தது ஹிந்து சமுதாயத்தில் வலுப்பட்டு வரும் விழிப்புணர்வைப் பறைசாற்றியது.

வழக்கத்தில் இல்லாத ஒன்றை நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும் என்றதுடன், சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க முடியும், வேறு இடத்தில் எரிக்க முடியுமா? என ஆணவத்துடன் கேள்வி எழுப்பிய அமைச்சர் ரகுபதி கண்டனக் கணைகளை எதிர்கொண்டார். கோயில் விஷயத்தை எந்த ஒன்றுடன் சம்பந்தப்படுத்தி பேசியிருக்கிறார்! இதிலிருந்தே இவர்கள் ஹிந்து கோயில்களை மதிக்கிற லட்சணம் புரிகிறது.

தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கோடு, இந்த பிரச்சினையை ஓட்டு வாங்கும் யுக்தியாக கையாண்டு, சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த ஓட்டுக்களை பெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தி.மு.க ஹிந்து சமய அறநிலையத்துறையை, தனது கைப்பாவையாக்கி வைத்திருக்கிறது.

தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இந்த அரசு எந்த நிலைக்கும் செல்லும். ஏற்கெனவே 1994 ஆம் ஆண்டு இரு நீதியரசர்கள் அமர்வின் மூலம், வெளியான தீர்ப்பிலேயே மலை உச்சியில் ஆலயத்தின் சார்பாக தீபம் ஏற்றலாம் என்று வெளியான தீர்ப்பை மறைத்து, இப்படி ஒரு நடைமுறையே இல்லை அதை எப்படி மீண்டும் புதிதாக கொண்டு வர முடியும் என்று கேள்வி எழுப்பி வருகிறது.

இதற்கு முன்னர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு மலை உச்சியில் தர்கா அருகில் தீபம் ஏற்றுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கருத்து கூறிய தர்கா நிர்வாகம், தற்போது நீதிமன்றத்தில் ஆட்சியினரின் நிர்பந்தம் காரணமாக அந்த கருத்தை மாற்றி, அதனால் தர்காவுக்கு பிரச்சினை ஏற்படும் என்று கருத்து கூறியுள்ளது.

ஏற்கனவே நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், அந்த உத்தரவுகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டது திமுக அரசு. தற்போது வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு சென்றாலும் அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து, மீண்டும் இது போன்ற ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கினால், அப்போது இந்த அரசு என்ன செய்யும் என்பது கேள்விக்குறி.


மாநிலமெங்கும் நூற்றாண்டு பழமையான பல்வேறு கோயில்களை நீர்நிலை ஆக்கிரமிப்பு, போக்குவரத்திற்கு இடைஞ்சல் என நீதிமன்றங்களில் பொய்யான தகவலை கொடுத்து, ஹிந்து பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி, அவர்களை காவல் துறையின் உதவியுடன் நசுக்கி, 400-க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்களை இடித்துள்ளது.

சென்னையில் அமைந்தகரையில் உள்ள விதிமீறல் சர்ச், கோயம்பேட்டில் அமைந்த ஆக்கிரமிப்பு மசூதி, பெரம்பூர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் இடிக்க உத்தரவிடப்பட்ட சர்ச், குரோம்பேட்டையில் தெரு நடுவே ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட சர்ச் என பல்வேறு சிறுபான்மை மக்களின் சர்ச்சுகள், மசூதிகள் அகற்றப்படாமல் அப்படியே நீடிக்கின்றன! ஆனால் ஹிந்துக்களின் கோயில்கள் என்றால், அடுத்த நிமிடமே தகர்க்கப்படுகிறது.

ஹிந்து உணர்வுகளை நசுக்குகின்ற மனோபாவம் கொண்ட இந்த திண்டாட்ட மாடல் அரசு, சிறுபான்மையினர் விவகாரம் என்றால் கண்டும் காணாமல் இருந்து விடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலே ஒருபடி போய், அவற்றை சட்டப்பூர்வமாக்க சட்டம் இயற்றுவதிலும் இறங்குகிறது.

மதுரை முருக பக்தர்கள் பிரம்மாண்ட மாநாட்டை அடுத்து ஏற்பட்டுள்ள எழுச்சி, தீபம் ஏற்றுவதில் ஒருங்கிணைந்த ஹிந்து சமுதாயத்தின் வெற்றி இவற்றைக் கண்டும் விவேகமே இல்லாமல் ஹிந்து விரோத வியூகத்தைக் கட்டி அழும் ஆளும் கட்சி கண்டு தமிழகம் கைகொட்டிச் சிரிக்கிறது.