காசாவில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் தற்போது குறிவைத்துள்ளது அங்குள்ள மருத்துவமனைகளை. அதிலும் குறிப்பாக அல் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷர்ஃப் அல் குத்ரா கூறுகையில், “இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த பெண்கள், குழந்தைகள், பாதிக்கப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அல் ஷிஃபாவில் மூன்றாவது நாளாக இஸ்ரேல் ராணுவம் சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஹமாஸ் தலைமை கமாண்டர்கள் அங்குதான் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் நீண்ட காலமாக நம்புகிறது. மருத்துவர்களையும் வெளியேற்றியுள்ளது.” என்றார்.
ஜெனின் மருத்துவமனையை முற்றுகையிட்ட இஸ்ரேல்: ஜெனின் நகருக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் அங்குள்ள மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளது. 80 ராணுவ வாகனங்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஜெனின் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் உள்பட ஓரிடத்தையும் விடாமல் இஸ்ரேல் ராணுவம் சோதனை செய்தது. அப்போது ஒலிப்பெருக்கி மூலம் அனைவரையும் வெளியேறும்படி கூறியது. அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் கைகளைத் தூக்கியபடி வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. அவர்கள் அவ்வாறு வெளியேறும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆயுதங்கள், சுரங்கப்பாதைகள் கண்டுபிடிப்பு: அல் ஷிஃபா மருத்துவமனையில் ஒரு வாகனத்தில் ஏராளமான AK-47 ரக துப்பக்கிகள், ஸ்னைப்பர் ரைஃபிள்கள், கிரனேடுகள், மற்ற வெடிப் பொருட்கள் இருந்ததாகத் தெரிவித்துள்ளது. அதேபோல், குழந்தைகளின் படுக்கைகளுக்குக் கீழ் இருந்து ராக்கெட் லாஞ்சர்கள், டாங்கர் எதிர்ப்பு மிசைல்கள் ஆகியனவற்றை ஹமாஸ் தீவிரவாதிகள் பதுக்கிவைத்துள்ளனர். அதேபோல் அல் குத்ஸ் மருத்துவமனையிலும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரன்டிஸி மருத்துவமனையில் ஹமாஸ் படையினரின் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையும் இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ளது. சோதனைகள் ஒருபுறம் நடந்தாலும், 4000 லிட்டர் தண்ணீர் 1500 பொட்டலம் உணவை ஷிஃபா மருத்துவமனையில் வழங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
உயிர் சேதத்தை தவிர்க்க முடியவில்ல: இஸ்ரேல் பிரதமர்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் காசாவில் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஹமாஸ் அழிப்பை மேற்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் அதில் நாங்கள் முழுமையாக வெற்றி பெற இயலவில்லை. இருப்பினும் குறைந்தபட்ச சேதாரத்துடன் எங்கள் வேலையை நாங்கள் முடிப்போம்” என்று கூறியுள்ளார்