ஒரு நெடுஞ்சாலையின் ஓரம் அரசமரம் நல்ல உயரமாகவும், இரண்டுபேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் அளவிற்கு அகலம் கொண்டிருக்கிறது. மரத்தின் நிழலில் பெரும் கூட்டம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மரத்தின் பல இடங்களில் விளம்பர பதாகைகள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்படவில்லை? மாறாக ஆணி வைத்து அடித்திருக்கிறார்கள் மரத்திற்கு வலிக்காதா?! அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை?
அந்த சமயத்தில் ஒரு சிறிய ஏணி, கையில் சுத்தியலுடன் ஒருவர் மட்டும் வேகமாக வருகிறார் ரணமான மரத்திலிருந்து அத்தனை விளம்பர பதாகைகளையும், அந்த ஆணிகளையும், பிடுங்கி மரத்தை காப்பாற்றிய கடமையுடன் சென்றுக் கொண்டிருக்கிறார்.
இப்படியான எண்ணங்களுடன் மரங்களை நேசிப்பவர்களில் ஒருவராக ராமநாதபுரம் மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் எஸ்.சுபாஷ் சீனிவாசன் தான் மரங்களுக்கான இந்த சேவையை செய்துக் கொண்டிருக்கிறார்.
“..மரங்களை காப்பாற்றுவது ஒவ்வொருவரின் சமூதாய கடமையாகும் என வலியுறுத்தும்..” எஸ்.சுபாஷ் சீனிவாசனிடம் பேசினோம்..,
“..நான் போக்குவரத்து காவல் துறையில் பணியில் இருக்கும்போது பெரும்பாலும் சாலைகளில் அதிகமாக சுற்றி வரவேண்டியிருந்தது. அந்த சமயங்களில் மரத்தின் நிழலை அனுபவித்த நான் மரங்களையும் நேசிக்க துவங்கினேன்.
அப்போது தான் கவனிக்கத் தொடங்கினேன் சாலையோர மரங்களில் விளம்பரம் என்கிற பெயரில் பதாகைகளை ஆணி அடித்து துன்புறுத்திக் கொண்டிருந்தனர் இதை கண்கூடாக பார்த்தபோது தான் அவற்றின் வேதனையை என்னால் உணர முடிந்தது.
அந்த மாதிரி மரங்களில் துளைத்தெடுத்த ஆணிகள் சிறிது நாட்களிலேயே துருப்பிடித்து மரத்தை ரணப்படுத்துகின்றன. மேலும் அம்மரம் விரைவில் பட்டு போய் விடுவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைகிறது.
ஆகவே மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை நீக்க முழுமூச்சாக களத்தில் இறங்கினேன் ஆணிகளால் காயம்பட்டு துளைத்த இடத்தில் அரைத்த மஞ்சள் விழுதை வைத்து அதற்கான வைத்தியமும் செய்து விடுவேன் இதை ஒரு சேவையாக 2017 ஆண்டு முதல் செய்து வருகிறேன்.
என்னுடைய காரில் ஒரு ஏணி, சுத்தியல், ஆணிகளை நீக்கும் கருவிகளை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவேன் சாலைகளின் இருபுறமும் உள்ள மரங்களை நோட்டமிட்டு எந்த மரத்தில் ஆணி அடிக்கப்பட்டிருக்கிறதோ அதனை நீக்கும் பணியை தனியொருவனாக செய்கிறேன்.
அப்படி முதலில் தேவக்கோட்டை பகுதியை சுற்றியிருக்கும் மரங்களை கண்காணித்து, விளம்பர பதாகைகளை அகற்றி அதில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அகற்றினேன்.
நான் போக்குவரத்துக் காவலர் என்பதால் சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி போன்ற ஊர்களில் பணி நிமித்த மாக சென்றாலும் பணிநேரம் தவிர ஓய்வு நேரத்தில் இந்த பணியில் ஈடுபடுகிறேன்.
திருவண்ணாமலையில் முக்கியமாக கிரிவலப்பாதை முழுவதும் மரங்களிலிருந்து ஒன்பது கிலோ ஆணியை பிடுங்கியுள்ளேன். பல்வேறு ஊர்களில் உள்ள மரங்களிலிருந்து இதுநாள் வரை மொத்தமாக 400 கிலோ ஆணிகளை நீக்கியிருக்கிறேன்.
மரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்ஸிஜனை தாயுள்ளத்துடன் தருகின்றன. ஆனால் சுயநல மனிதர்கள் வியாபாரம் நோக்கில் விளம்பர பதாகைகளை வைக்க மரங்களில் கண்மூடித்தனமாக ஆணிகளை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர்.
இப்படி மரங்களை ஆணிகளால் காயப்படுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தால் தான் மரங்களை காப்பாற்ற முடியும், அப்போதுதான் காலங்களை கடந்து நிற்கும் பொக்கிஷமான மரங்களை பாதுகாக்க முடியும்.
மரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் போது அதை காணும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் எனக்கு கைகொடுத்து பாராட்டுவார்கள். ராமநாதபுரம் முன்னாள் கலெக்டர் வீரராகவராவ் என் சேவையை கௌரவிக்கும் விதமாக சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறார்.
இதைத்தவிர பொதுமக்கள், மாணவர்கள் துணையுடன் மரக்கன்றுகளையும் நட்டு வருகிறேன் ராமநாதபுரத்தில் சேதுபதி குளம் அரசு மருத்துவக் கல்லூரி தேவிப்பட்டினம் ஊர்ப்பகுதிகளில் இதுவரை ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.
அத்துடன் கம்பன் கழகம், பொது அமைப்புகள் மற்றும் 50க்கும் மேலான அரசு பள்ளிகளுக்கும் சென்று மரங்கள் வளர்ப்பது குறித்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.
நாம் நமது சுற்றுபுறங்களில் உள்ள சுற்றுச்சூழல், சுகாதாரத்திற்கும் போராட வேண்டும். மரம் வளர்ப்பது நமக்கு மட்டுமல்ல அனைத்து உயிரனங்களுக்கும் பயன் தருகிறது. மரக்கன்றுகளை தொடர்ந்து நட்டால் மட்டுமே இந்த பூமியை காப்பாற்ற முடியும்.
ஒவ்வொரு தனி நபர்களும் ஒரு மரக்கன்றை நடவேண்டும். இதை சமுதாய கடமையாக செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்..” என்கிறார் மரங்களிடமும் மனிதம் பேணும் காவலர் சுபாஷ். F