மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்தன. இதனால், குளத்தின் தண்ணீரை மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் ஏராளமானமீன்கள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும்குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவு கொடுப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்தன. குளத்தில் அதிக துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கோயில் செயல் அலுவலர் குளத்தில் இறந்துகிடக்கும் மீன்களை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த மீன்வளத் துறை அலுவலர்கள், குளத்தைச் சுற்றி ஆய்வு செய்தனர். பின்னர், குளத்தில் உள்ள தண்ணீரை ஆய்வகத்தில் பரிசோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத்தடுக்க, ஊழியர்கள் மூலம் குளத்தை சுற்றி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. குளத்தில் கழிவுநீர் கலந்ததால் மீன்கள் இறந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதுகுறித்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் செயல்அலுவலர் கவெனிதா கூறுகையில், “குளத்தில் இறந்து கிடந்தமீன்களை முழுவதுமாக அகற்றிவிட்டோம்.
இறந்த மீன்களின் மொத்த எடை 600 கிலோ. இதுகுறித்து மீன்வளத் துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மழைக் காலங்களில் இதுபோல மீன்கள் இறக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன. மீன்கள் இறப்புக்கு மழை காரணமா? நீரின் தன்மை காரணமா? என்பது குறித்து, மீன்வளத் துறை ஆய்வு அறிக்கை சமர்ப்பித்த பிறகே தெரியவரும்” என்றார். மீன்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், “மயிலாப்பூர் கோயில் குளத்தின் தண்ணீர் பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில்தான் மீன்கள் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.