2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.அப்போது அவர், காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சியையும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “தற்போது இந்தியா உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. பொருளாதார ரீதியாக கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதற்கு இதுவே சரியான தருணம்” என்று குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நாட்டின் பொருளாதார நிலைமைமிகவும் மோசமாக இருந்தது. எங்கும் ஊழல் நிரம்பி இருந்தது. அப்போது நாங்கள் வெள்ளை அறிக்கை கொண்டு வந்திருந்தால்,நாட்டின் பொருளாதார அவலத்தைப் பார்த்து முதலீட்டாளர்கள் யாரும் முதலீடு செய்ய முன்வந்திருக்க மாட்டார்கள். மக்கள்நலனை முன்னிலைப்படுத்தியதால், அப்போது நாங்கள் வெள்ளை அறிக்கைக் கொண்டு வர வில்லை. பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களால் இந்தியா இன்று பொருளாதார ரீதியாக உலகின் 5-வது பெரிய நாடாக உருவெடுத்து இருக்கிறது. எனவே, தற்போது வெள்ளை அறிக்கை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் உஜ்வாலா யோஜனா, ஆவாஸ் யோஜனா, முத்ரா யோஜனா உள்ளிட்ட திட்டங்களால் சிறு குடும்பங்கள் மிகுந்த பலன் பெற்றுள்ளன. இன்று மக்கள் இத்திட்டங்களைப் பற்றி உணர்வுப்பூர்வமாக பேசிவருகின்றனர். இதனால், தேர்தலைநோக்கமாகக் கொண்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை” என்று தெரிவித்தார்.