‘மன்னிப்பு கேள்; இல்லையேல் கறுப்பு கொடி போராட்டம்’

‘மத்திய அமைச்சர் முருகனை அவதுாறாக பேசிய, தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு மன்னிப்பு கேட்கும் வரை, அவர் செல்லும் இடமெல்லாம், பா.ஜ., சார்பில் கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும்,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

ராணிப்பேட்டையில், ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய இணைஅமைச்சர் முருகன், பார்லிமென்டில் துறை சார்ந்த பதில் ஒன்றை கூறினார். அவரை பார்த்து, தி.மு.க.,எம்.பி.,யான டி.ஆர்.பாலு, தகுதியில்லாதவர் என கூறுகிறார். டி.ஆர்.பாலுவின் பேச்சுமனவருத்தத்தை அளிக்கிறது. அமைச்சர் முருகனின் பெற்றோர் விவசாயம் செய்பவர்கள், சாதாரண வீட்டில் வசிப்பவர்கள், அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்தால் தகுதி இல்லையா. அருந்ததி சமுதாயத்தை சேர்ந்தவரை முதன் முறையாக தமிழகத்திலிருந்து அமைச்சராக்கினால் தகுதி இல்லையா. இதற்கு, டி.ஆர்.பாலு, பொது இடத்தில், அமைச்சர் முருகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

டி.ஆர்.பாலுவின் பேச்சு, வாய்க்கொழுப்பு மட்டும் இல்லை, ஆணவத்தின் உச்சம். தி.மு.க., மூத்த தலைவர்களுக்கு எந்த அளவிற்கு ஆணவம் வந்துள்ளது என்பதற்கு இந்தப் பேச்சே சான்று. இதற்கான விளைவுகளை டி.ஆர்.பாலு நிச்சயம் சந்திக்க வேண்டும். அவர் எங்க சென்றாலும், கறுப்பு கொடி காட்டுவோம். மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்.

தமிழக அமைச்சர் காந்தி, 120 கோடி ரூபாய்க்கு வீடு கட்டவது எல்லாருக்கும் தெரியும். ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நோக்கம், விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்தல், காலால் தறி நெய்பவர்களுக்கு கூலி வழங்கல், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் புடவை, வேட்டியை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தல். ஆனால், அந்த புடவை, வேட்டியின் தரம் குறித்து, ‘கோவை சவுத் இந்தியா டெக்ஸ்டைல் ரிசர்ச் அசோசியேஷன்’ என்கிற ‘சிட்ரா’ அமைப்பிடம் சோதனை செய்யப்பட்டது.

நூறு சதவீதம் பருத்தி இருக்க வேண்டிய வேட்டியில், பாலிஸ்டர், 78 சதவீதமும், காட்டன், 22 சதவீதமும் உள்ளது. இதுதான் விஞ்ஞான ஊழல், காட்டன் ஒரு கிலோ, 320 ரூபாய், பாலிஸ்டர் ஒரு கிலோ, 120 ரூபாய், பாதி விலை குறைவு. இதை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுளோம். பா.ஜ., சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில், புகார் அளிக்க உள்ளோம். வழக்கம் போல் இதற்கும் முதல்வர் பதில் அளிக்க மாட்டார்; நடவடிக்கையும் எடுக்க மாட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.