மனித குலத்திற்கான யோகா

நமது மத்திய அரசின் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படும் என ஐ.நா அவை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு முதல் ஐ.நா சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் அன்றைய நாளில் ஏராளமான பொதுமக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சி மேற்கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக யோகாசன நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

மைசூருவில் மோடி

இவ்வருடம் 75வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள முக்கியமான எழுபத்தைந்து இடங்களில் யோகா தினத்தின்போது பல தரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூருவில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் யோகாசன பயிற்சியில் பிரதமர் மோடி மக்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கர்நாடக அரசின் துறைகள், அமைச்சர்கள், யோகா குருக்கள் உள்ளிட்ட சுமார் 15,000 யோகா ஆர்வலர்கள் பங்கேற்று யோகாசனம் செய்வார்கள். இதனையொட்டி அங்கு டிஜிட்டல் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இவ்வாண்டின் கருப்பொருள்

சர்வதேச யோகா தினத்தின் 8வது ஆண்டு கருப்பொருளாக ‘மனித குலத்திற்கான யோகா’ என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மனதின் குரல்’ உரையில் அறிவித்திருந்தார். மேலும், மனித நேயத்திற்கான யோகாவை மையமாக வைத்து, இந்த ஆண்டு மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக சிறப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உலகில் தொடர் நிகழ்வு

‘உலகமே ஒரு குடும்பம்’ மற்றும் ‘ஒரே சூரியன், ஒரே  பூமி’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில்  ‘கார்டியன் ரிங் ஃபார் யோகா’ என்னும் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பாரதத் தூதரகங்களில் சூரிய உதய நேரத்தில் இணைய வழியில் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேரு நாடுகளில் வெவ்வேறு நேரங்களில் சூரிய உயம் நிகழ்வதால் இது உலக அளவில் அற்புதமான ஒரு தொடர் யோகா நிகழ்வாக நடைபெறும். அதன்படி 70 நாடுகளில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கி கூட்டு யோகா பயிற்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், யோகாசன நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

வாழ்வின் அங்கம் யோகா

யோகாவை அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள். யோகாவின் அழகே அதன் எளிமைதான். ஒரு யோகா விரிப்பும், வெற்றிடமுமே போதுமானது. வீட்டிலோ, வேலை நேர இடைவேளையிலோ அல்லது குழுப் பயிற்சியாகவோ யோகாவை மேற்கொள்ளலாம். ஞானம், செயல் மற்றும் பக்தியின் அற்புதமான கலவையாக யோகா பரிமளிக்கிறது. அதிவேகமாக இயங்கும் உலகில், ஆழ்ந்த மனஅமைதியை தருவதாய் யோகா விளங்குகிறது என தொடர்ந்து தனது கருத்துகளால் யோகா செய்ய மக்களை ஊக்குவித்து வரும் பிரதமர், சர்வதேச யோகா தினத்தை மக்கள் அவர்களின் நகரம், கிராமத்தில் உள்ள ஏதேனும் ஒரு முக்கியய் சின்னமாக உள்ள இடத்தில் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.