மனிதா, நீ மகத்தானவன்!

இன்னும் மூன்று வாரங்களில் குடியரசு தினம் (ஜனவரி 26) வருகிறது. ஆண்டு 1950ல் பாரத மக்கள் தங்களுக்கென அரசியல் சாசனத்தை உருவாக்கி ஏற்றுக் கொண்ட நன்னாள் அந்நாள். அரசியல் சாசனத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையின் தலைவராக விளங்கியவர் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

மூல அரசியல் சாசனத்தின் பக்கங்களில் பாரத கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிறைய ஓவியங்களை தீட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல ஓவியர் நந்தலால் போஸ். இன்னொரு ஓவியர் ஜபல்பூரை சேர்ந்த 22 வயது ராம் மனோகர் சின்ஹா. ராமர், கிருஷ்ணர், நடராஜர், ராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி என தேசத்தின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் பல்வேறு ஓவியங்களை தீட்டினார்.

“என்ன சன்மானம் எதிர்பார்க்கிறாய்?” என்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் சின்ஹாவை கேட்டார். “நமது சாசனத்துக்காக ஓவியம் வரைய ஊதியம் வேண்டாம்; அரசியல் சாசனத்தின் முகப்பில் என் கையெழுத்து இட அனுமதி தந்தால் போதும்” என்றார்,

சுதந்திரப் போராட்ட வீரரின் புதல்வரான இளம் சின்ஹா. முகப்பில் தன் கையெழுத்துக்கு பதில் “ராம்” என்று மட்டும் பொறித்தார் சின்ஹா. தேசிய மாவீரராக நாடு போற்றும் ராமபிரான் பெயர் என்றென்றும் அரசியல் சாசனத்தில் இவ்வாறு இடம் பெறச் செய்துவிட்டார் அந்த தன்னலமில்லா தேசபக்தர் (படம்).

சுதந்திர பாரதம் உருவாக வீரம், தியாகம், தேசபக்தி ஆகிய பண்புகள் முக்கியக் காரணம் என்றால், சின்ஹா போல சுயநலம் இல்லாத புத்திசாலி இளைஞர்களின் தொண்டும், அதில் முக்கியப் பங்கு வகிப்பது பெருமிதம் தரும் விஷயம்.