சமீபத்தில்தனது 110வது பிறந்த நாளை கொண்டாடிய மதுரையை சேர்ந்த பெருமாள் தாத்தா உடற்பயிற்சி என தனியாக எதுவும் செய்யவிலை, உணவு கட்டுபாடு என பெரியதாக ஏதும் இல்லை ஆரோக்கியத்திற்கு குறைவில்லை, இதுவரை மருத்துவமனை சென்றதில்லை மன அமைதிக்கும் சந்தோஷத்திற்கும் குறைவில்லை என மருத்துவமனையிலேயே பிறந்து காலம் முழுவதும் மருத்துவத்திற்கு என தனியாக ஒரு பட்ஜட் போட்டு மாதம் தோறும் நிதி ஒதுக்கி கடைசியில் மருத்துவமனியிலேயே இறக்கும் நமக்கெல்லாம் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். அதுமட்டுமா, இவர் தன் 108வது வயதில் அளித்த ஒரு பேட்டியில் இப்போதுகூட போண்டா வடை கொடுத்தால் சாப்பிடுவேன் என கூறி இதை சாப்பிடு இப்படி சாப்பிடு அதை சாப்பிடாதே, பஜ்ஜி போண்டா போன்ற எண்ணை பதார்த்தங்களை தொடாதே என ஒரு அறிவுரை சொல்லும் கூட்டத்திற்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் அந்த எவர்கிரீன் ஹீரோ.
இதைபோலவே சில வருடங்களுக்கு முன் வந்த ஒரு பத்திரிக்கை செய்தியில் தன் 102வது வயது வரை தினமும் கருவாடு இல்லாமல் சாப்பிட்டது கிடையாது, ஒரு சில வருடம் முன்பு வரை செய்திதாள்களை வாசிப்பேன் இப்போதுதான் கண் சிறிது மங்கலாக தெரிகிறது என தன் 104வது வயது வரை ஆரோக்கியமாக வாழும் மனிதர் பற்றிய ஒரு செய்தி வந்தது. கருவாடு அதிகம் சாப்பிட்டால் பிபி ஏறும், கிட்னி செத்துவிடும் என நாம் பயப்படும் வேலையில் இவருக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாயிற்று?சற்றே நில்லுங்கள் அதற்காக நீங்களும் உடனே ஒரு பிளேட் பஜ்ஜி ஒரு பிளேட் போண்டா, பிரியாணி, சிக்கன் 65 என மூக்கு பிடிக்க சாப்பிட கிளம்பிவிடாதீர்கள்.
இவர்களுடைய இந்த ஆரோக்கிய நீண்ட நல்வாழ்வு எதை நமக்கு உணர்த்துகிறது? நல்லஉணவு, சுகாதாரமான இருப்பிடம், நல்ல மருத்துவ வசதி, சொகுசான வாழ்க்கை முறை என பல சௌகரியங்கள் இருந்தும் நாம் ஏன் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறோம்? அப்படி எனில் நாம் எங்கு தவறிழைக்கிறோம்?இது எல்லாம் ஏதோ குருட்டு அதிர்ஷ்டமா அல்லது தலை எழுத்தா? நாமும் இவர்களைபோல வாழமுடியாதா?என பல கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை. இவற்றிற்கு விடைதான் என்ன?
உடற்பயிற்சி என தனியாக ஏதும் இல்லை என்றாலும் நல்ல உடல் உழைப்பு, அளவான நல்லஉணவு, நல்ல உறக்கம், நல்ல பழக்க வழக்கங்கள், பெரியோரை மதித்து நடத்தல், முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்தல் என வாழ்ந்ததே தன்னுடைய இந்த நீண்ட ஆரோக்கிய வாழ்வுக்கு காரணமாக சொல்கிறார் பெருமாள் தாத்தா..அந்த 104 வயது பெரியவருடைய வாழ்க்கையை பார்த்தாலும் கிட்டதட்ட இந்த வாழ்க்கை முறையை தான் நம்மால் காண முடிகிறது. இந்த இரண்டு பெரியவர்களின் வாழ்விலும் உள்ள ஒரு ஒற்றுமை மனதின் ஆரோக்கியம் தான் இவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை காரணம் என்றால் அதுமிகை அல்ல.
இவர்கள் இருவரும் பெரிய பணக்காரர்கள் இல்லை என்றாலும் மனதால் நிறைவானவர்களாகவே வாழ்கின்றனர். நம் முன்னோர்களை போலவே இறை நம்பிக்கையுடன் தங்கள் மனதை எதற்கும் பெரியதாக அலட்டி கொள்ளாமல் எதற்கும் பெரியதாக ஆசைபடாமல், தங்கள் வாழ்வில் வரும் சுகதுக்கங்களை அப்படியே இறைவன் கொடுத்ததாக மனதார ஏற்றுகொண்டு அதை வாழ்வின் ஒரு அங்கமாக மட்டுமே பார்த்து எளிமையாக வாழ்ந்ததும், மனதை தெளிந்த நீரோடையாக வைத்திருப்பதும்கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
மனிதர்கள் அனைவருக்கும் உடலும் மனமும் ஒன்றுபோல இருப்பதில்லை, அவர்களுடைய உணவு, வாழ்க்கை முறை, தொழில், குடும்பம், சொந்தபந்தங்கள், சுற்றுசூழல் போன்ற பல விஷயங்களும் இதை நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன என்பதை நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டிய அதே வேளையில் மனதின் சக்தியையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். என்னதான் நல்ல உணவு உண்டாலும், நல்ல வாழ்க்கை முறை கடைபிடித்தாலும், சுற்றி நடப்பவைகள் எல்லாம் நல்லதாகவே நடந்தாலும் நம் மனது ஆரோக்கிய மற்றுபோனால் இவை அனைத்தும் வீண்தான்.
அதே வேளையில் என்ன கஷ்டங்கள் வந்தாலும் அதை அப்படியே இறைவன் பாதத்தில் சமர்ப்பித்து இனி அனைத்தும் அவனருளால் நல்லதாகவே நடக்கும் என அவனை நம்பி மன அமைதியுடன் வாழ்பவருக்கு வாழ்வே ஒரு சொர்கம்தான். நம் மனதினை நன்றாக வைத்துகொண்டால் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்பதற்கு உதாரணமாக நமக்கு பனி சூழ்ந்த இமயமலையில் ஒற்றை கோவணத்துடன் தவம் செய்யும் முனிவர்கள்கூட தேவையில்லை இங்குள்ள பெருமாள் தாத்தாக்களே போதும்.
நம் மனதின் சக்தியை நம்மைவிட நம் முன்னோர்களே அதிகம் உணர்ந்திருந்தனர். என்பதற்கு வேதகால விஞ்ஞானம் தொடங்கி ராஜராஜன் கட்டிய தஞ்சை கோவில் வரை பல்லாயிர கணக்கான சாட்சிகள் நம் கண்முன் விரிந்துள்ளன. எனவே நாமும் நம் மனதினை செம்மைபடுத்த வெளிநாட்டு அறிஞர்களின் நூல்களை தேடி ஓட தேவையில்லை அவற்றைவிட இன்னும் பன்மடங்கு அதிகமாக மனதை செம்மைபடுத்த ஆற்றல் கொண்ட நம் புராண இதிகாசங்களே நமக்கு போதும்.
விவேகானந்தர் ரமணர் போன்ற ஞானிகள் அவ்வப்போது நமக்கு எடுத்து சொல்லிய “நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என அஷ்ட வக்ர கீதையின் கூற்றுக்கேற்ப மனமது செம்மையானால் நம் வாழ்வும் செம்மையாகும் என்பதை உணர்ந்தால் நாமும் இறையருளாள் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது உறுதி.