தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பா.ஜ.க தலைவர் மனோஜ் திவாரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். ஹிந்துக்களின் பண்டிகையான தீபாவளியின் போது அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்த நீதிமன்றத்தை நாடிய அவர், டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் பட்டாசு விற்பனை, கொள்முதல் மற்றும் பயன்பாடு மீதான தடையை நீக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்டோபர் 10ம் தேதி இந்த வழக்கை பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அந்த பொதுநல மனுவில், “ஹிந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியைக் கொண்டாடும் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுக்குப் பிறகும் டெல்லி அரசு அனைத்து வகையான பட்டாசுகளையும் சேமிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை அமல்படுத்தும் வகையில், சாமானிய மக்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய திட்டங்களைத் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை டெல்லி அரசு மட்டுமே பட்டாசுக்கு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு பல மாநிலங்கள் இதுபோன்ற தடைகளை விதித்துள்ளன, மேலும் இந்த ஆண்டும் அத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதால், அந்தந்த மாநில அரசுகளை அணுகுவதற்கு பதிலாக உச்ச நீதிமன்றம் நாடப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் தொடர்ந்து திட்டமிட்ட வகையில் இலக்கு வைக்கப்படுகின்றன. வாழ்வதற்கான உரிமை என்ற பெயரில், மத சுதந்திரத்தை பறிக்க முடியாது. இருண்ட யுகத்தில் நாடு செல்வதைத் தவிர்க்கவும், நாட்டை நேர்மறையான கட்டமைப்பிற்குள் வழிநடத்தவும் இந்த மனுவை தாக்கல் செய்வது அடிப்படைக் கடமை. அனுமதிக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் தொடர்பாக தவறான புரிதல் உள்ளது. இதன் விளைவாக பல்வேறு மாநில அரசுகளும் அவற்றின் அதிகாரிகளும் பல வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை இயற்றுகின்றனர். இது சில நேரங்களில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிராக செல்கிறது. குடிமக்கள் தங்கள் பண்டிகைகளை அச்சமின்றி அமைதியாக கொண்டாட அனுமதிக்கும் பொறுப்பு அரசுக்கும் உள்ளது” என மனுவில் கூறப்பட்டுள்ளது.