மத்திய அரசை பாராட்டிய தி எகனாமிஸ்ட்

வங்கித் துறைக்கு புத்துயிர் அளித்ததற்காக மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் பிரிட்டீஷ் வார இதழான தி எகனாமிஸ்ட் பாராட்டியுள்ளது. மேலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தின் இழப்புகளை மறைக்கும் கொள்கை எவ்வாறு பேரழிவை ஏற்படுத்தியது என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் வங்கிகள் பெரும் லாபத்தை ஈட்டுகின்றன’ என்ற தலைப்பில் வெளியான அதன் கட்டுரையில், “பாரத வங்கிகளின் சமீபத்திய ஆண்டு வருமானம் அற்புதமானது. பாரத அரசுடைமை வங்கிகள் சராசரியாக 11 சதவீதமும் தனியார் வங்கிகள் கிட்டத்தட்ட 15 சதவீதத்துக்கு அதிகமாக வருமானம் ஈட்டுகின்றன. ஒரு சில வளர்ச்சியின் அடிப்படையில் கணக்கிடப்பட்டால், பாரதத்தை சேர்ந்த வங்கிகள் உலகின் அதிக லாபம் ஈட்டும் வங்கிகளில் ஒன்றாக உள்ளன. 2016ல் நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திவால் சீர்திருத்தங்கள், தோல்வியுற்ற நிறுவனங்களை விரைவாக கலைக்க உதவியது. 27 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை 12 வங்கிகளாக இணைத்ததும், போராடி வரும் வங்கித் துறைக்கு புத்துயிர் ஊட்ட மூலதனம் அளிக்கப்பட்டதும் அவற்றின் மறுமலர்ச்சிக்கு வழி வகுத்தது.

பின்னர், வங்கிகள் தங்கள் சொந்தக் காலில் எப்படி நிற்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டதால், இதுபோன்ற மூலதன உட்செலுத்துதல்கள் சமீபத்தில் குறைக்கப்பட்டுள்ளன. மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள் பாரதப் பொருளாதார வளர்ச்சியின் ஒட்டுமொத்த வேகத்திற்கு உதவியது. வங்கி அமைப்பு ஆரோக்கியமானதாக மாறியதால், அவை அதிக அளவில் கடன் கொடுத்துள்ளன. 2017ல் வருடாந்திர கடன் வளர்ச்சி 3 சதவீதமாகக் குறைந்தது. அது இப்போது 18 சதவீதமாக உள்ளது. வட்டி விகிதங்கள் அமெரிக்காவை விட குறைவாகவே உயர்ந்துள்ளன. இது மக்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கொரோனா தொற்றுநோய்களின் போது கூட பாரத வங்கிகள் முன்னேற்றத்தைக் காட்டின. செயல்படாத கடன்கள் 2018ல் கார்ப்பரேட் கடனில் 16 சதவீதம் என உச்சத்தை எட்டியது. பின்னர் அவை வீழ்ச்சியடைந்துள்ளன. 2024ம் ஆண்டின் தொடக்கத்தில், அது 2 சதவீதத்துக்கும் கீழே குறையும் என்று மதிப்பிடும் நிறுவனமான கிரிசில் கணித்துள்ளது.

2010களின் முதல் பாதியில் (காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ சகாப்தம்) பாரத வங்கிகள் வலுவான எண்ணிக்கையைப் பதிவு செய்தன. ஆனால் நம்பமுடியாத அளவிற்கு இழப்புகளை சந்தித்தன. அவற்றை அடையாளம் கண்டுகொள்வதைத் தவிர்ப்பதற்காக வராக் கடன்களை ‘ரோலிங் ஓவர்’ செய்யும் மோசமான நடைமுறை பரவலாக இருந்தது. குறிப்பாக அரசியல் தொடர்புகளைக் கொண்ட கடன் வாங்குபவர்களுக்கு அரசின் வங்கிகளால் அளிக்கப்பட்ட கடன்களில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. நிலக்கரி உள்ளிட்ட தொழில்களில் அரசின் உரிமங்களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல்கள் முடுக்கிவிடப்பட்டன. உச்ச நீதிமன்றம் 2014ல் நூற்றுக்கணக்கான சுரங்க அனுமதிகள், தொலைத்தொடர்பு அனுமதிகளை ரத்து செய்தது” என தி எகனாமிஸ்ட் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.