தீபாவளியை முன்னிட்டு, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன், பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வரும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல், 102.63 ரூபாய்க்கும்; டீசல், 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2022 மே 22ம் தேதிக்கு பின் விலைகள் மாறாமல் உள்ளன.
இந்நிலையில், ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு தீபாவளி பரிசு அளிக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, லிட்டருக்கு தலா, 10 ரூபாய் வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு, 2021ல் தீபாவளிக்கு முந்தைய நாள், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு, 5 ரூபாயும், டீசலுக்கு, 10 ரூபாயும் குறைத்தது. அவற்றின் விலைகள் குறைந்ததால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதேபோல, வரும் தீபாவளிக்கும், பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு, தலா, 10 ரூபாய் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, கலால் வரியை குறைப்பது, அதனால் ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்டுவது குறித்து ஆலோசனை நடத்து வருகிறது. தீபாவளிக்கு முன் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகலாம். இவ்வாறு அவர் கூறினார். தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி கூறியதாவது: பெட்ரோல், டீசலுக்காக, டீலருக்கு வழங்கப்படும் விளிம்பு தொகை, 2017 முதல் மாற்றப்படவில்லை. தற்போது, பெட்ரோல், டீசல் விலை குறைந்தால், நடைமுறை மூலதன செலவு குறையும் என்பதால், டீலருக்கு சாதகமாக இருக்கும்.
பெட்ரோல், டீசல் விலை அதிகம் இருப்பதால், அவற்றை சிக்கனமாகவே பலரும் பயன்படுத்தி வருகின்றனர். விலை குறைந்தால் பலரும், சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துவர்; எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனையும் அதிகரிக்கும். எனவே, விலை குறைப்பு அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்