திருவள்ளூர், வி.எம்.நகரில், ஆர்.எம்.ஜெயின் குரூப் ஆப் ஸ்கூல் என்ற பெயரில், தனியார் பள்ளி செயல்படுகிறது. அங்கு ‘விரும்பினால் பெறுவீர்’ என்ற நுால் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, தென் மண்டல இயக்குனர் அரவிந்தன் பேசியதாவது: கடந்த, 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில், ஏழு கோடி பேர் போதைப்பொருள் பயன்படுத்துவது தெரியவந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு ெஹராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள், கடல் வழியாக கடத்தப்படுகின்றன. இது, நம் நாட்டை சீர்குலைக்கும் முயற்சி. சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட, 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,500 கிலோ ‘மெத்தம்பெட்டமைன்’ எனும் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளோம். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சி முடிந்ததும், அந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரணவ் ஆதித்யா எழுந்து, அரவிந்தன் அருகில் வந்தார். ”அரசே டாஸ்மாக் கடைகளை நடத்துகிறதே, அதன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமா?” என, அவரிடம் கேட்டான். அந்த கேள்விக்கு சிரித்தபடியே அரவிந்தன் அளித்த பதிலில், ”அமெரிக்காவில் பரிசோதனை அடிப்படையில், இரண்டு, மூன்று ஆண்டுகள் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் இது தோல்வியில் முடிந்தது,” என்றார். பின், மாணவனின் தோளை தட்டிக் கொடுத்து, ”நல்ல கேள்வி,” என பாராட்டினார்.