மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டம்

மதமாற்ற தடைச் சட்டம் சில மாநிலங்களில் நடைமுறையிலிருந்தாலும், ஆயுள் தண்டனை என குறிப்பிடும் அளவிற்கு கடுமையான சட்டத்தை அஸ்ஸாம் மற்றும் உத்திரப் பிரதேச மாநிலங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வழக்கம் போல் மதசார்பற்ற கட்சிகளாக காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணியினர் கதறத் தொடங்கியுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காகவே இவ்வாறு கூச்சலிடுகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த செய்தியாகும். ஆனால், உண்மையில் இவ்வளவு கடுமையான சட்டம் கொண்டு வர காரணம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

அஸ்ஸாமில் – சட்ட விரோதமாக ஊடுருவிய பங்களாதேசத்தினரை அவர்கள் நாட்டுக்கு அனுப்புவது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் நமது வனவாசி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் சூழலை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இச்சட்டம் இந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவானது. அஸ்ஸாமில் லவ் ஜிகாத் நடக்கிறது. இதன் காரணமாக அப்பாவி ஹிந்துக்கள் கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். இதை தடுக்கத்தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

லவ் ஜிகாத்திற்கு நிகாரன மற்றொரு காரணி நில ஜிகாத்தாகும். அஸ்ஸாம் மக்களின் பூர்வீகம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க மாநில அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இந்த அர்பணிப்பின் விளைவாக இனிமேல் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான நில விற்பனைக்கு முதலமைச்சரின் ஒப்புதலைப் பெறுவதை மாநில அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.

அதாவது, இனிமேல் ஒரு முஸ்லிம் ஒரு ஹிந்துவுக்கு சொந்தமான நிலத்தை வாங்க விரும்பினால், முதலமைச்சரின் அனுமதி தேவை, முதல்வரின் அனுமதி பெறாமல் நிலம் பதிவு செய்ய இயலாது. இச்சட்டத்தின் விளைவாக மதப் பிரச்சினைகள் நிறைந்த பகுதிகளில் உள்ளுர்வாசிகள் மட்டுமே சொத்து வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என அஸ்ஸாம் முதல்வர் கூறியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஊடுருவிய பங்களாதேஷ் முஸ்லிம் எண்ணிக்கையின் காரணமாக மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அதனை கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் மற்ற மாநிலங்களில் இருந்து அஸ்ஸாம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும்  அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை வனவாசிகளாக அங்கீகரிக்க சில நிபந்தனைகளை விதிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறுவதை தடுக்கலாம் என்றும் வனவாசி மக்களின் நலன்களை பாதுகாக்க இந்த விதிமுறைகள் உதவும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மத மாற்றம் என்பது தேசிய அபாயம். மத மாற்றம் என்பது ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையே என ஒருமுறை சுவாமி தயானந்த சரஸ்வதி குறிப்பிட்டுள்ளார். மத மாற்ற விரும்புவர் தனது சொற்களாலோ, நடத்தையாலோ, ஒருவருடைய மத நம்பிக்கைகளையோ, மூதாதையரையோ, தெய்வங்களையோ இழிவுப்படுத்துவதும் வன்முறையே என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தான் உத்தரப் பிரதேச அரசு மத மாற்றத்தை கட்டாயப்படுத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மனதில் கொண்டே இச்சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இச்சட்டம், அமுலுக்கு வந்த பின்னர் 108 வழக்குகளில் 72 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 24 புகார்களுக்கு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.          F

 

 

நதி என்பது நீர் அல்ல,

நம் கலாச்சாரப் பிரவாகம்!

காவிரி அன்னை நடந்து வரும் அந்தக் காட்சியைப் பாருங்கள் கன்னியரே…” இது நாங்கள் பள்ளியில் பாடிய பாடல். அவள் நடந்து வந்தாலும் ஓடி வந்தாலும் பிரவாகமாய் சீறிப் பாய்ந்து வந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே. நமது உற்சாகத்தை குதூகலத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் நாள் ஆடிப் பெருக்கு விழா எடுத்து வருகிறோம்.

“ஞாயிறு போற்றுதும்,  திங்களைப் போற்றுதும்,  மாமழை போற்றுதும்” என நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையை, பஞ்ச பூதங்களைப் போற்றும், வணங்கி வழிபடும் உன்னதமான ஹிந்துத்துவமே பாரத கலாச்சாரம். நீர்நிலைகளை மக்கள் வணங்கி வருவது அதன் ஒரு பகுதியாகவே. அன்று நதிக்கரையில் படையல். கலவை சாதங்கள் என்ன, கலக்கும் உறவுகள் என்ன! வெற்றிலை பாக்குடன் காதோலை கருகமணி வைத்து அகல் விளக்கேற்றி நதியில் விடுகிறோம். நதி அன்னைக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிற விதம் இது. நம் வாழ்வை வளமையாக்க மாநிலம் கடந்து ஓடி வருபவள் அல்லவா!

காவிரியும் கொள்ளிடமும் அரங்கனின் கழுத்தில் ஆரமாகத் திகழ்வதாக ஐதீகம். தன்னை நாடி வந்த காவேரியைக் காண ஸ்ரீரங்கநாதரே ஆடிப் பெருக்கு நன்னாளில் சீர்வரிசையுடன் காவிரிக்கரையில் எழுந்தருளுகின்றார். எனில் மக்களின் மகிழ்ச்சிக்குக் கேட்க வேண்டுமா? தெய்வம் தொழும் நதி! நாமோ நதியை தெய்வமாய் தொழுவோர். என்ன ஒரு சுவாரஸ்யம்!

நம் வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு “காவேரி” என்று பெயரிடுவது நாம் போற்றும் பாரம்பரியம். கர்நாடகத்திலும் தமிழகத்திலும் “காவேரி”களுக்குப் பஞ்சமில்லை! கர்நாடகத்தில் பணிபுரிந்த உத்தரப் பிரதேச விஞ்ஞானியொருவர் தன் மகளுக்கு காவேரி என்றே பெயரிட்டார். குஜராத்தில் வாழ்ந்த கன்னட குடும்பத்தினரின் இரு குழந்தைகள் சிந்து, சரயு. அது சரி, கங்கா? எந்த ஊரில் இல்லை? நதிகளை ஆராதிக்கும் தொன்மையான பண்பாட்டிற்கும், சரி, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் சரி, ஒரு சான்று வேண்டுமா? நமது குடும்பங்களில் பெண் குழந்தைகளாகத் தவழும் ‘நதி’கள்  வேறென்ன?

தமிழகத்தில் மக்கள் நீர்நிலைகளைப் போற்றி ஆராதித்து வணங்குவது போல் அரசு தரப்பில் செய்யப்படுவதில்லை. மதசார்பற்ற என கூறிக்கொள்ளும் நாத்திக அரசல்லவா? அதனால் தயக்கமாக இருக்கலாம். மேட்டூர் அணை திறக்கப்படும்போது சம்பிரதாய மலர் தூவல் மட்டுமே இங்கு அமைச்சர்களின் அதிகபட்ச பங்களிப்பு.

ஆனால் சமீபத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் “கங்கா ஹாரத்தி நடப்பது போல் கர்நாடக அரசு சார்பில் காவேரி ஹாரத்தி நிகழ்த்தப்படும்” என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். உண்மையாகவே பாராட்டப்பட வேண்டிய விஷயம் இது. தனது அறிக்கையில் மேலும் அவர்  கூறுகிறார்: “காவிரி நதி மட்டுமல்ல. நமது உணர்ச்சி. நமது பாரம்பரியம். நம் தெய்வம் அவள். அந்த தெய்வத்துக்கு நன்றி செலுத்தும் விதமாக, நமஸ்கரிக்கும் விதமாக, இனி காவிரி ஹாரத்தி நடைபெறும்” என்கிறார். தமிழகத்திலும் கர்நாடகாவிலும் காவிரிக்கரை நெடுக 700 திருக்கோயில்கள் அமைந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார். அடடா, இது அல்லவோ சனாதன தர்மத்தின் ஆணிவேர்!

‘பார்க்குமிடத்திலெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா’ என்று பாரதி கூறியது போல் எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் ஆன்மிகம் இது. அந்த உணர்வை உள்வாங்கிக் கொண்டு சரியாக வெளிப்படுத்தியும் இருக்கிறார்  சிவக்குமார். ஆன்மிகப் பாதையில் கர்நாடக அரசு? வாழ்த்துவோம்.

நதிநீர்ப் பங்கீட்டை வைத்து நடத்தும் அழுக்கு அரசியல் அடியோடு அடித்துக் கொண்டு போனால் சரி.  F