‘மதமாற்றம் ஒரு பலாத்காரம்’; பரதன் பதில்கள்

‘மதமாற்றம் ஒரு பலாத்காரம்’ என சுவாமி தயானந்த சரஸ்வதி கூறியது பற்றி?

– மைதிலி ஸ்ரீனிவாசன், திருக்கண்ணமங்கை

ஒரு ஆளை அடித்து, உதைத்து அவரது உடலில் ஏற்படுத்தும் ரத்தக் காயங்களை விட ‘மதமாற்றம்’ கொடூரமானது. ஹிந்துவாக இருப்பதில் ஒரு பலனும் இல்லையென்றும் தங்களது மதத்திற்கு மாறினால் சொர்க்கமே கிடைக்கும் என்றும் பொய் சொல்லி மதமாற்றுவதும் ‘பலாத்காரமே’ என்கிறார் சுவாமிஜி.

* ‘நல்லதையும் செய்யாதே, கெட்டதையும் செய்யாதே’ என்று கூறுபவர்களைப் பற்றி?

– ஈ. திலகவதி, கீழ்பெண்ணாத்தூர்

இப்படிச் சொல்கிறவர்கள் பெரிய மகான்கள் ஒன்றும் இல்லையே! அதனால் நீங்கள் கவலைப்படாமல் நல்லதையே செய்து வாருங்கள். எப்போதோ படித்த ஒரு வாசகம்: தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் போராட்டத்தின் போது வெறுமனே மௌன சாட்சியாக இருந்து வேடிக்கை பார்ப்பவர்களும் அதர்மத்திற்குத் துணை போனதாகத்தான் கருதப்படுவார்கள்.

கும்பகோணத்தில் மகாமக ஏற்பாடுகள் எப்படி உள்ளன?

– இரா. சரவணன், பெருமாநல்லூர்

மகாமகம் 2016 பிப்ரவரி 22ம் தேதி வருகிறது. கடந்த ஆண்டு வந்தவர்கள் 35 லட்சம் பேர். இந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் பணிகள் ஏனோ மந்தமாக நடைபெறுகின்றன. அது சரி, இதுபற்றி நீங்கள் கவலைப்படாமல் மகாமகம் சென்று வாருங்கள்.

* பிகார் தேர்தலில் பாஜகவிற்கு தோல்வி ஏன்?

– ஜீ. குப்புஸ்வாமி, வடபழனி

எத்தனையோ காரணங்கள்; ஓரிரு வரியில் பதில் சொல்ல முடியாது. நாடாளுமன்றம் வேறு; சட்டமன்றம் வேறு என்பதை டெல்லியைத் தொடர்ந்து பிகார் மக்களும் புரிந்து வாக்களித்திருக்கிறார்கள். இதில் புரியாத புதிர் கம்யூனிஸ்டுகள் தான். ஒரு சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டு வாங்கிவிட்டு, பாஜக தோல்வி பற்றி விமர்சித்து வருகிறார்கள்.

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி?

– கே. விஜயராகவன், சின்ன காஞ்சிபுரம்

கேரளத்தில் எப்போதும் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் என இரண்டு அணிகளுக்கிடையே தான் போட்டி நடைபெறும். முதல் தடவையாக பாஜக மூன்றாவது அணியாக தடம் பதித்துள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சி, பாலக்காடு நகராட்சிகளில் மாபெரும் வெற்றி. கம்யூனிஸ்டு தலைவர் அச்சுதானந்தன் வார்டில் பாஜக கவுன்சிலரே வெற்றி பெற்றுள்ளார்.

‘தி இந்து’ (தமிழ்) எப்போதுமே ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கு எதிராக எழுதி வருகிறதே.   ஏன்?

– மா. பாலகுமார், விருத்தாச்சலம்

சில பத்திரிகைகள் மட்டுமே செய்தியை செய்தியாக வெளியிடுகின்றன. ஆனால் ‘தி இந்து’ செய்திகளோடு தனது வக்கிரக் கருத்துக்களையும் அள்ளி வீசுகிறது. காரணம் கம்யூனிஸ்டுகளும் நக்ஸலைட்டுகளும் எழுத்தாளர்கள் போர்வையில் உள்ளே ஊடுருவியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அடித்து நொறுக்குவோம்” என்கிறாரே ராகுல் காந்தி?

– சு.மணிகண்டன், திருச்சி

ஐயோ பாவம்! அவருக்கு வரலாறு தெரியாது. அவருடைய கொள்ளுத்தாத்தா நேருவும் பாட்டி இந்திரா காந்தியும் ஆர்.எஸ்.எஸ்ஸை அழிக்க தலைகீழாக நின்று பார்த்தார்கள். ஆர்.எஸ்.எஸ் நெருப்பில் வளர்ந்த செடி; அது வெயிலில் கருகாது.