மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் கட்டாய மதமாற்றம் மற்றும் வளர்ந்து வரும் லவ் ஜிஹாத் வழக்குகள் குறித்து கவலை தெரிவித்த பாஜக எம்.எல்.சி கோபிசந்த் படல்கர், மஹாராஷ்டிரா சட்டசபையின் சட்ட மேலவையில், மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கக் கோரினார். இந்த வழக்குகளை அரசு தீவிரமாக எடுத்து மதமாற்றங்களைத் தடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சட்டப் பேரவையில் பேசிய படல்கர், “நகர்ப்புறங்களில் லவ் ஜிகாத் சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சாங்லி மாவட்டத்தில் உள்ள எனது ஆட்பாடி கிராமத்திலும் இதுபோன்ற வழக்குகள் நடக்கின்றன. சிகிச்சைக்காக வந்த நோயாளியை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்த வீடியோ வைரலாக பரவியது என்றார். வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை டான்ட் தெஹ்சில் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட மற்றொரு சம்பவத்தை எடுத்துக்காட்டினார். மேலும், இதில் சம்பந்தப்பட்ட குரேஷி என்பவர் கைது செய்யப்பட்டார், ஆனால் அவரது குழு இன்னும் அந்த பகுதியில் பலரை அச்சுறுத்தும் வகையில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. இந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றத்திற்கு இலக்காகிறார்கள். பெண்கள் லவ் ஜிஹாத்திற்கு இரையாகின்றனர்” என்று கூறினார். அவரது கோரிக்கைக்கு பதில் அளித்த துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “பழங்குடியின சமூகத்தில் நடக்கும் மதமாற்றங்கள் மோசடி திருமண வழக்குகளுடன் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்திய பல்வேறு மாநிலங்களிடமிருந்து தகவல் கேட்டு, மகாராஷ்டிராவிலும் கடுமையான சட்டம் இயற்றப்படும். இதற்கு எதிராக சட்டம் இயற்றக் கோரி, லட்சக்கணக்கான மக்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதை அரசு ஒருபோதும் புறக்கணிக்க முடியாது” என்றார். மகாராஷ்டிராவில் லவ் ஜிஹாத் மற்றும் பசு வதைக்கு எதிராக பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு கடும் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், மாவட்ட அளவில் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.