மதங்களை வைத்து பிரிவினை ஏற்படுத்த வேண்டாம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, அந்தப் பேச்சு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அனைவருடைய கவனத்தை ஈர்க்கவா அப்படி பேசினார்? அல்லது சுயநலத்திற்காகவா அப்படி பேசினார்! காரணம் புரியவில்லை.

சினிமாத்துறையில் கால் அடி வைத்த தருணத்தில், தமிழ்நாட்டில் இளையராஜா அவர்கள் உச்சத்தில் இருந்தார். நீங்கள் வந்த பிறகு, அவருக்கு சினிமா துறையில் கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைந்து விட்டன என்று ஒருபோதும் அவர் குறை சொல்லவில்லை.

அவர் நினைத்திருந்தால், இஸ்லாமியர் வந்ததால் என்னுடைய பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என குற்றம் சுமத்தி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை. இது கலைத்துறை மேல் வைத்துள்ள அவர் நம்பிக்கையைக் காட்டுகிறது. அவர் இளைய சமுதாயத்தை வரவேற்று, அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார், அதில் நீங்களும் ஒருவர்!

8 ஆண்டுகள் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என்றால், நீங்கள் முஸ்லிமாக இருக்கும் காரணத்தினால் அல்ல. உங்கள் திறமை குறைந்து விட்டது என்று எடுத்துக் கொள்ளலாம், அதை விட்டுவிட்டு ஒட்டு மொத்த பாலிவுட்டை குறை சொல்வது நியாயமா? “சாவா” படத்தில் பிரிவினை தூண்டும் விதமாக படம் எடுத்து சம்பாதித்துள்ளார்கள் என குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்?

பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல நடிகையுமான கங்கனா ரனாவத் அவரது படத்திற்கு இசை அமைக்க, தங்களை அழைத்த போது நீங்கள் அவரை சந்திக்க மறுத்துள்ளீர்கள், இசை அமைக்கவும் மறுத்து விட்டீர்கள், இது உங்களுடைய ஆணவத்தின் உச்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பாலிவுட் யார் கண்ட்ரோலில் உள்ளது? என்பதை விட்டு, தமிழக சினிமாத்துறை யார் கையில் உள்ளது என்று தங்களுக்கு நன்றாக தெரியும். அவரை எதிர்த்து, உங்களால் ஒரு கேள்வியாவது கேட்க முடியுமா? அந்த தைரியம் உங்களுக்கு உள்ளதா? பல கோடி பெற்றுக் கொண்டுதான்.

நீங்கள் இசை மூலமாக சம்பாதித்து உள்ளீர்கள். நீங்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் பேசிய அந்த பேச்சு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

உங்களுடைய ஒவ்வொரு பேச்சும், இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இந்த பேச்சு, தலைகுனிவு ஏற்படுத்தியுள்ளது. திறமை இருந்தால், எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, எந்த மதமாக இருந்தாலும் சரி, அனைவரையும் அரவணைத்து செல்வது இந்த தேசம்.

மொழிகளை வைத்து, மதங்களை வைத்து பிரிவினை ஏற்படுத்த வேண்டாம் என நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள்!