செம்பரம்பாக்கம் ஏரி –
இது சென்னையிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள மிக பிரம்மாண்டமான ஏரி. சென்னை நகரின் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படும் தலையாய ஏரிகளில் ஒன்று. இதன் உபரிநீர் வெளியேறும் இடத்தில்தான் ‘அடையாறு’ ஆறு உருவாகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது, அடையாறில் இணைந்து மணப்பாக்கம், திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது.
இந்த ஏரியின் நீர்மட்ட உயரம் 24 அடி. சென்னையில் பெய்த கனமழையால் 21 அடி உயரம்வரை எட்டியது. மழை பெய்யும் வேகம், வானிலை அறிக்கைகளை கவனத்தில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். மாறாக இதற்கு மேல் ஏரி தாங்காது என்ற நிலை வந்தபிறகு, டிசம்பர் 1ம் தேதி காலை 5.00 மணிக்கு ஏரியின் மதகுகள் திறக்கப்பட்டு 33,500 கன அடி தண்ணீர் அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது. பொங்கி எழுந்த அடையாறு, தான் செல்லுகின்ற பாதைகள் முழுவதையும் ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள், குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. ஏராளமான மக்கள் பலியாகி இருப்பார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. அது பற்றிய சரியான விபரம் இதுவரை கணக்கிடப்படவில்லை. முதல் தடவையாக மீனம்பாக்கம் விமான நிலையம் வெள்ளக்காடாய் மாறி, விமான சேவை பல நாட்கள் நிறுத்தப்பட்டது.
இப்போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்ட முறை பற்றிய விவாதங்கள் துவங்கி விட்டன. திமுக, வருகின்ற தேர்தலை மையமாக வைத்து இதனை அதிமுகவிற்கு எதிரான பிரச்சாரமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டது.
தமிழக அரசு தவறு எங்கே நடந்துள்ளது என்பது பற்றி கண்டறிய வேண்டும். இதற்கான பொறுப்பு பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, காவல்துறைகளைச் சார்ந்தது. மழையால் வந்த துன்பம் இயற்கைப் பேரிடர். ஆனால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் வந்த சீர்கேடுகள் இயற்கைப் பேரிடரல்ல என்றே தோன்றுகிறது. தவறு நடந்தது அதிகார வர்க்கத்தின் மசமசத்தனத்தால். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.