கங்கை கரையில் ஸ்ரீஇராமன் பர்ணசாலையுள் இருக்கிறான். அப்போது குகன் அவனைக் காண வந்தான். இலக்குவனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தான் வந்ததை இராமனிடம் தெரிவிக்கும்படி வேண்டிக் கொண்டான். இலக்குவன் குகனை கண்ட போதே அவனுடைய பண்பைத் தெரிந்து கொண்டான். இராமனிடம் சொல்லும் அது வெளிப்படுகிறது.
சுற்றமும் தானும் உள்ளம்
தூயவன். தாயின் நல்லான்
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு
இறை, குகன் ஒருவன் என்றான்.
அவனும் அவன் இனத்தாரும் உள்ளத்தில் ஒரு குற்றமும் இல்லாதவர்கள் ; தூயவர்கள். அலை எறிந்து அழகாகச் செல்லும் கங்கையின் துறையில் உள்ள ஓடங்களுக்கு தலைவன். குகன் என்ற பெயர் உடைய ஒருவன்.
(அயோத்தி — கங்கை 39)
தன்னை சுற்றி உள்ள (இயற்கை சூழலும், மனிதர்களும் ) புறச்சூழல்களாலேயே ஒரு குணம் உருவாகிறது.
தீய ஒழுக்கம் உள்ளவர்களுடன் நல்லவர்கள் நட்பு கொண்டால் அந்த நல்லவரும் தீய ஒழுக்கத்தையே மேற்கொள்வர். இதையே மற்றொரு இடத்திலும் கம்பர் சுட்டி காட்டுகிறார்.
சீதையை கவர்ந்து செல்ல அவள் தனித்திருக்கும் போது இராவணன் முனிவர் வேடத்தில் வந்தான். அவனை சீதை உபசரித்து, நீர் யார்? எங்கே வாழ்கிறீர்கள்? , என்று கேட்டாள். அதற்கு இராவணன், நான் அரக்கர்கள் வாழும் ஊரில் இருக்கிறேன், என்றான். உடனே சீதை,
வனத்திடை மாதவர் மருங்குவைகலீர்!
புனத்திரு நாட்டிடைப் புனிதர் ஊர்புக
நினைத்திலீர் : அறநெறி நினைக்கிலாதவர்
இனத்திடை வைகிளீர் என் செய்தீர்!
என்றாள்.
மாதவ வேடங் கொண்ட நீவிர் காட்டிலே முனிவர்கள் வாழும் இடத்திலே வாழவில்லை ; சோலைகள் சூழ்ந்த நாட்டிலே நல்லோர்கள் வாழும் ஊரில் புகுந்து வாழவும் நினைக்கவில்லை. அறநெறிப் பற்றி சிறிதும் நினைக்காதவர்கள் கூட்டத்தில் வாழ்கின்றீர். எவ்வளவு தவறான காரியத்தை செய்தீர், என்றாள்.
(ஆரண்யம் — சடாயு 52)
இதை திருவள்ளுவரும்,
நிலத்து இயல்பால் நீர்திர்ந்தற்றாகும் ; மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு.
நிலத்தின் தன்மையால் நீரின் இயற்கை பண்பு மாறும் ; அது சேர்ந்துள்ள நிலத்தின் தன்மையைப் பெறும். அதுபோல் மனிதரின் அறிவு அவர் சேர்ந்திருக்கும் இனத்தின் தன்மையைப் பொருத்து இருக்கும்.
எனவே நாம் சிற்றினம் தவிர்க்க வேண்டும். நல்லோர்களின் கூட்டுறவே நன்மை தரும்.
திருநின்றவூர் ரவிக்குமார்