மணல் அள்ளும் தி.மு.க எம்.பி

தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆற்றில் மணல் கொள்ளை தொடர்வதாக புகார்கள் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ‘மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவது எப்படி?’ என கேள்வியெழுப்பியிருந்தது. இந்நிலையில், தி.மு.கவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் மாநிலங்களவை எம்.பி.,யுமான ராஜேஷ்குமார், தற்போது மணல் அள்ளுவது குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராஜேஷ்குமார், மணல் அள்ளும்போது கட்சியினருக்குள் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக சமரசம் பேசும்போது அவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோவில், ‘எந்த மாவட்ட செயலாளரும் கட்சிக்காரர்களையும் கூப்பிட்டு மணல் அள்ளுங்கள் என்று சொல்வதே கிடையாது. நான் ஒருவன் தான் சொல்கிறேன். மற்ற அனைத்து மாவட்ட செயலர்களும் கம்பெனிக்கு மணல் அள்ள அனுமதி கொடுத்துவிட்டு பணம் வாங்கி கொள்கின்றனர்’ என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி, ‘திமுக ஆட்சிக்கு வந்து, முதல்வராக ஸ்டாலின் கையெழுத்துப் போட்ட அடுத்த வினாடியே மாட்டு வண்டி உரிமையாளர்கள், ஆற்றுக்குள் இறங்கி மணல் அள்ளலாம். அதை யாரும் தடுக்க முடியாது. அப்படியே தடுக்கும் அதிகாரிகள் பதவியில் இருக்க முடியாது’ எனப் பேசியது இங்கு நினைவு கூரத்தக்கது.