மக்ரானாவிலிருந்து மார்பிள் கற்கள்.. மைசூருவிலிருந்து கிரானைட் கல்.. நாட்டின் ஒட்டுமொத்த கலாச்சார கலவையாக திகழும் ராமர் கோயில்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்த 22-ம் தேதி பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் கூறியதாவது: நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் கோயிலைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்தக் கோயிலின் கட்டுமானமானது நாட்டின் சில சிறந்த நிபுணர்களின் ஆலோசனை மூலம் அமைந்துள்ளது. கங்கோத்ரி, யமுனோத்ரி, கைலாஷ் மானசரோவர், பிரயாகைகள் உட்பட இந்தியாவின் அனைத்து புனிதத் தலங்களிலிருந்தும் புனித நீர் மற்றும் புனித மண் கொண்டு வரப்பட்டு கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்தியாவின் ஜான்சி,பித்தூர், ஹால்திகாட்டி, அமிர்தசரஸ் பொற்கோயில், யமுனோத்ரி, தாய்லாந்தின் அயுத்தயா நகரம்உள்ளிட்ட 2,500 இடங்களில் இருந்து புனித மண் கொண்டுவரப்பட்டு கோயில் அடித்தளக்கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டது.

மேலும் 155 நாடுகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு ஜலாபிஷேகம் செய்யப்பட்டது. மகாராஷ்டிராவின் ஆலப்பள்ளி, பலார்ஷா வனப்பகுதியிலிருந்து மெருகேற்றப்பட்ட தேக்கு மரங்கள் கொண்டு வரப்பட்டு கோயிலின் 44 கதவுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 14 கதவுகளில் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நேரத்தில் நாடு முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `மங்கல த்வனி’ இசை இசைக்கப்பட்டது. கோயில் நுழைவாயிலில் யானை், சிங்கங்கள் சிலை, ஹனுமான், கருடன் சிலைகள் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.

ராமர் சிலையானது பனாரஸிஆடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. லக்னோவைச் சேர்ந்த ஹர்சஹாய்மால் ஷியாமலால் ஜுவல்லர்ஸ் கடையைச் சேர்ந்த அங்குர் ஆனந்த் இந்த நகைகளை வடிவமைத்துள்ளார். ஆடைகளை, டெல்லியைச் சேர்ந்தடிசைனர் மணீஷ் திரிபாதி வடிவமைத்துள்ளார்.

பால ராமர் சிலையை மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்தார். சிலைக்கான கல் மைசூரு மாவட்டத்தில் உள்ள குஜ்ஜேகவுடனபுராவிலிருந்து எடுக்கப்பட்டது. 300 கோடி ஆண்டுகள் பழமையான கிரானைட் கல்லாகும் இது. மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள சந்தன் நகரிலிருந்து விளக்குகள் கொண்டு வரப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட 20 விதமான மலர்கள் கொண்டு வரப்பட்டு கோயில் திறப்பு விழாவில் அலங்காரம் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.