“எல்லா இடங்களிலும் மக்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. மாநிலத்தின்அன்புச் சகோதரிகள், குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்களிடமிருந்து நான் அன்பைப் பெறுகிறேன்” என்று மத்தியப் பிரதேச முதல்வரும், பாஜக வேட்பாளருமான சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது ஜனநாயகத் திருவிழா நல்வாழ்த்துக்கள். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகன்களின் கடமையும் உரிமையுமாகும். மத்தியப்பிரதேசத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள், மருமகன்கள், மருமகள்கள் அனைவரும் தங்களின் உரிமையினைப் பயன்படுத்தி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. முதலில் வாக்களிப்பு.. பின்னர் சிற்றுண்டி…” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக 150 இடங்களில் வெற்றி பெறும்: இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பாஜக தேசிய செயலாளரும், இந்தூர்-1 தொகுதி பாஜக வேட்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று நான் வாக்காளர்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். இரட்டை எஞ்சின் ஆட்சி இங்கு அமையும். முன்பு செய்ததைப் போல மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை நாங்கள்மீண்டும் செய்வோம். பாஜக 150க்கும் அதிமான இடங்களில் வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் அவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா கூறுகையில், “நாங்கள் பெரும்பான்மையுடன் மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைப்போம் அதனை வெற்றிகரமாகவும் நடத்துவோம்” என்று தெரிவித்தார். மத்தியப்பிரதேசத்தில் தேர்தல்: மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 5.6 கோடிவாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2.88 கோடி பேர் ஆண்கள். 2.72 கோடி பேர் பெண்கள். இந்த தேர்தலில் 22.36 லட்சம் இளைஞர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
தலைநகர் போபாலில் உள்ள 7 தொகுதிகளில் மட்டும் 2,049 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 4 தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மத்திய பிரதேசத்தில் பாஜக – காங்கிஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 110 இடங்களையும், காங்கிரஸ் 109 இடங்களையும் கைப்பற்றியது. இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க,முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது. அதேபோல, மத்திய பிரதேசத்தில் சுமார் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது.