வாழ்க்கையை மாற்றிய தொண்டுப் பணிகள்
கிராம மக்களின் குடிப்பழக்கம், அறியாமை போன்றவற்றை நீக்க சேவா பாரதியைச் சேர்ந்த முழுநேர ஊழியர்கள் பாடுபடுகிறார்கள்.
ஏர்வாடி என்ற ஊரில் சேவை பணியாற்றிய
செல்வி லதா இதுபற்றி கூறியதாவது: “முதலில் அந்த ஊருக்கு நான் போனபோது அந்த ஊரில் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. பெரும்பாலும் அவ்வூரில் உள்ள அனைவரும் என்னத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தார்கள்.
நான் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்த ஊரில் உள்ள பெரியவர்களைப் பார்த்து அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டேன்.
அதன் பிறகு அந்தவூர் பாலர் பள்ளிக்குப் போனேன். அங்கு ஆசிரியர் இல்லை. குழந்தைகள் மட்டும் இருந்தார்கள். நான் அந்தக் குழந்தைகளிடம் அன்பாகப் பழகினேன். அக்குழந்தைகளுக்கு கல்வி, பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை சொல்லிக் கொடுத்து பழக்கப்படுத்தினேன். அக்குழந்தைகளை ஹிந்து சமயக்குறிகளான விபூதி, சந்தனம் குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடப் பழக்கினேன்.
சிறு குழந்தைகளை காலை எழுந்தவுடன் பெற்றோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க செய்தேன். இதன் மூலம் பெற்றோர்
களுக்கு என் மீது அதிகப்பாசமும் அன்பும் ஏற்பட்டன.
முதலில் நான் செல்லும் கடற்கரைப் பகுதி
யான அவ்வூரில் ஒழுக்கம் இல்லை. அது மட்டும் இன்றி இளைஞர்களின் நிலையும் மிகவும் ஒழுக்கக் கேடாக இருந்தன.
இதனால் அங்கு மாதர் சங்கங்களும், இளைஞர் சேவா சங்கமும் ஏற்படுத்தி அங்கு தினசரி கோயில் பூஜை, ஊர்ப் பொதுப்பணி என செயல்படுத்தியதன் மூலம் அங்கு மாற்றம் ஏற்பட்டது. இவர்கள் இப்போது நல்ல முறையில் உள்ளனர். வெளியூர் ஆண்கள் இரவு 7 மணிக்குமேல் இந்த ஊருக்குள் வருவது முழுவதுமாகத் தடுக்கப்பட்டுவிட்டது.
அப்பகுதியில் வாழ்பவர்கள் மீனவர்களாக இருப்பதால் ஓரளவிற்கு நல்ல வருமானம் கிடைக்கும். இருந்தாலும் அவர்கள் அதைக் குடித்தே அழித்து விடுவார்கள். அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொன்னவுடன் புரிந்து கொண்டு பின் வைப்புநிதியில் பணம் போட்டு சேமிக்க ஆரம்பித்தனர். குடிப்பதையும் நிறுத்தி விட்டனர்.
“1981ல் வள நாடு என்ற கிராமத்தில் குடிநீர் எடுக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை ஊர்ப் பொதுக்கிணற்றில் அவ்வூர் மக்கள் தண்ணீர் எடுக்க விடுவதில்லை. இதை கேள்விப்பட்டு, அங்கு சென்று பெரியோர்களைப் பார்த்துப் பேசி, சமய வகுப்புகள் எல்லாம் நடத்தி சாதி வேற்றுமையை மறக்கச் செய்து ஒன்றாகக் கூடி ஒற்றுமையாக வாழச் செய்தோம்” என்று கூறினார் ஸ்ரீ சண்முகசாமி என்ற சேவாபாரதி முழு நேர ஊழியர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஆறு ஆண்களும் ஐந்து பெண்களும் சேவைப் பணிக்கென தமது வாழ்வை அர்ப்பணித்துள்ளனர் என்று அப்போதைய இதன் மாநில அமைப்பாளர் சுந்தர லெக்ஷ்மணன தெரிவித்தார்.
தள்ளாத வயதிலும் தளராத சேவை
கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த டாக்டர் செங்கோட்டையன் வயது 82. தூய வெள்ளாடை, பொலிவான முகம், செயலில்20 வயது இளைஞனின் ஆற்றல் இவற்றின் அபூர்வ உருவகம்தான் டாக்டர் செங்கோட்டையன்.
இராமேஸ்வரத்தில் சேவாபாரதியின் இலவச மருத்துவ மையத்தில் தங்கி இம்மாவட்டம் முழுதும் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்
களிலும் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி செய்ததோடு ஆலோசனைகளையும் வழங்கி வந்தார் இந்த டாக்டர். எம்.பி.பி.எஸ் அறிமுகம் செய்யப்பட்ட முதல் குழுவில் மருத்துவராகத் தேர்வுபெற்றவர் இந்த டாக்டர். தமிழக சேவா பாரதியின் முழுநேர ஊழியராகத் தன்னை அர்ப்பணம் செய்து
கொண்டவர். “தமிழகத்திலேயே இராமநாதபுரம் மாவட்டம்தான் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்ற கருத்து உண்டு. எனவேதான் இதைத் தேர்ந்தெடுத்தேன்” என்று சொல்லி அங்கு சென்று சேவைப் பணியை ஆரம்பித்தார். இராமேஸ்வரம், 22, தெற்கு ரதவீதியில் உள்ள சேவாபாரதி மருத்துவ மையத்திலிருந்து வாரத்தில் ஐந்து நாட்கள் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாக் கிராமங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தன் குழுவினருடன் சென்று மருத்துவ சேவை செய்தார்.
“தங்களின் இந்த முடிவை உங்கள் வீட்டில் குடும்பத்தினர் ஏற்றார்களா?” என்று சந்தேகத்துடன் வினவியபோது, “இத்தனை வயசுக்கப்புறம் இது தேவையா? முடியுமா? என்றுதான் கேட்டார்கள்” என்று கூறிச் சிரிக்கிறார். ஆனால் தனது அயராத சேவையால் அதனை செய்து காட்டினார். மனமும் உடலும் தளராத டாக்டர் செங்கோட்டையன்.-
–தொடரும்.
(18.4.1997 விஜயபாரத இதழிலிருந்து)
சுந்தர லெஷ்மணன்