மக்கள் அதிருப்தியை மறைக்கவே பிரதமர் மீது ஸ்டாலின் அவதூறு: பாஜக குற்றச்சாட்டு

திமுக ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியை மறைக்கவே பிரதமர் மோடி குறித்து அவதூறுகளை முதல்வர் ஸ்டாலின் அள்ளி வீசுகிறார் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பாஜக எங்களுக்கு போட்டியே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், திமுக பிரச்சார பொதுக்கூட்டங்களில் ஒரு மணி நேரம் பேசினால் அதில் 50 நிமிடங்கள் பாஜகவை பற்றிதான் பேசுகிறார். தேர்தல் களத்தில் பாஜக போட்டி இல்லை என்றால், அதைப்பற்றி ஏன் பேச வேண்டும்?

1972 முதல் திமுக – அதிமுக என்றிருந்த தமிழக அரசியல் களம்,இப்போது திமுக – பாஜக என்றுமாறியிருப்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக அரசு மீதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தலில் அறிக்கையில் கூறியபடி சமையல் எரிவாயுசிலிண்டருக்கு ரூ.100 மானியம் ஏன் வழங்கவில்லை, பெட்ரோலுக்கான மாநில அரசின் வரியில் 5 ரூபாயை ஏன் குறைக்கவில்லை, தாலிக்கு தங்கம் திட்டத்தை ஏன் நிறுத்தினீர்கள்? என பிரசாரத்துக்கு செல்லும் திமுகவினரிடம் மக்கள்கேள்வி கேட்கிறார்கள். இதையெல்லாம் மறைக்கவே மத்திய பாஜக அரசு மீதும், பிரதமர்மீதும் அவதூறுகளை முதல்வர் அள்ளி வீசுகிறார். உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று,செல்லும் இடமெல்லாம் பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால், திராவிடம், திராவிடர், திராவிட மாடல் என்று சொல்லி, தமிழ், தமிழர் அடையாளத்தை அழித்து வரும் திமுகவுக்கு தமிழ்பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது? இந்த தேர்தலில் தமிழகத்திலும் பாஜக கூட்டணிக்கே மக்கள் வெற்றியை தருவார்கள் என்றார்.