பொங்கி எழுந்த ஆலகால விஷம் மண்ணுலக ஜீவன்களை பாதிக்கக் கூடாது என்று திருவுள்ளம் கொண்ட ஸ்ரீ பரமேஸ்வரன், பாற்கடலிலிருந்து நுரைத்துப் பொங்கி வந்த அதிஜ்வாலாகரமான ஆலகால விஷத்தினைத் தனது கழுத்தில் தாங்கி நீலகண்டனாக நின்றது இந்த நன்னாளில்தான். “இத்தகைய கருணைக்கடலாக உன்னால்தான் எங்களை ரக்ஷிக்கமுடியும்,” என தமது சிவானந்தலஹரியில் வணங்கி நிற்கிறார் ஆதிசங்கரர்.
அன்னை பார்வதி தேவி உமையொருபாகனின் கண்ணைப்பொத்திய செயலால் விளைந்த குழப்பத்தை நீக்கிக்கொள்ள விரதமிருந்து பேறுபெற்றதும் இந்த நாளில்தான். சிவனாரின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலுக்கும், நான்முகனுக்கும் பாடம் கற்பிக்க நினைத்த மகாதேவன், லிங்கோத்பவராக பெரும் ஒளிப்பிழம்பாகத் தோன்றி காட்சி கொடுத்ததும் இத் திருநாளில்தான். அர்ஜுனன் பாசுபதக் கணையைப் பெற்றதும், கண்ணப்பர் தனது கண்ணினை எடுத்தளித்து ஈசன் முகத்தில் அப்பி மோட்சம் பெற்றதும் இந்த நாளில்தான். பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும், மார்க்கண்டேயருக்காக யமனை ஈசன் தண்டித்ததும் இந்த சிவராத்ரி நாளில்தான்.
இவ்வளவு பெருமைகள் நிறைந்த இந்த மகத்தான நாளில் இரவு முழுவதும் கண் விழித்து, சிவ தியானம் மேற்கொண்டு வணங்கினால் வல்லமை மிகு சம்பத்துகள் அனைத்தையும் பெறலாம் என்று தெரிவிக்கின்றன பல சாஸ்திர நூல்கள். பிறப்பிலா பெருமை அடைய வேண்டுமா? சிவலோகப் பதவியைப் பெறவேண்டுமா? 24 வருடங்கள் மகாசிவராத்திரி விரதமிருந்தால் போதும் என்கிறது சிவராத்திரி புராணம். மகாசிவராத்திரி விரதமிருந்த புண்ணிய சீலர்களைக் கண்டு யமனே அஞ்சுவார் என்றும், எல்லா யாகங்களையும் தர்மங்களையும்விட இந்த மகாசிவராத்திரி விரதம் விசேஷமானது என்றும் அந்நூல் கூறுகிறது.
மகாசிவராத்திரி விரதம்:
விரதமிருப்போர் மகாசிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டுமே உணவருந்தி சிவநாமம் ஜபித்துத் தங்களைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும். அன்று அதிகாலையில் நீராடி, நீறுபூசி சிவாலயம் சென்று ஈசனை வணங்க வேண்டும். சிவ சிந்தனையுடன் 24×7 இருந்து, திருமுறைகளை ஓதி இரவு முழுவதும் கண்விழித்திருந்து நான்கு ஜாமங்களிலும் சிவ வழிபாடு செய்ய வேண்டும். கொஞ்சம் வசதி கொண்டோர் தகுந்த சிவாச்சாரியார்களை அணுகி வீட்டில் நான்கு கால பூஜைகளைச் செய்யலாம். விரதம் முடித்த மறுநாள் காலையில் நீராடி, சிவனடியார்களோடு சேர்ந்து உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.
இரவு முழுக்க கண்விழிப்பது என்றால், உறங்காமல் இருப்பது என்று பொருளல்ல. ஆன்மா விழித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆன்மா இறைச் சிந்தனையிலேயே லயித்திருக்க வேண்டும். ஐந்தெழுத்தை இரவு முழுக்க சொல்லி ஆலயம் சென்று கூட்டத்தில் தரிசனம் செய்ய முடியாதவர்கள், வீட்டிலேயே ருத்ராட்ச மாலையைக் கையில் வைத்து ஐந்தெழுத்தை ஓதலாம். சிவனின் படத்துக்கு வில்வத்தால் அர்ச்சித்து தெரிந்த பாடல்களைப் பாடி வழிபடலாம். பக்தர்களின் மனத் தூய்மையையும், அர்ப்பணிப்பையும்தான் ஆண்டவர் விரும்புகிறார். ஆண்டவனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஆன்ம பலத்தினை பெருக்கிக்கொண்டு ஆண்டவனோடு இணைய சிவராத்திரி விரதம் வழிவகுக்கும்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி