மகாபாரதம் சொல்லப்படாத உண்மைகள்

ஏற்கனவே, பீமன் கூறியதை நம்பவில்லை. இப்பொழுது வானவர்கள் நேரில் வந்து எச்சரிக்கையும் விட்டாயிற்று ! தனக்கு எதிரே த்ருஷ்டத்யும்னன் நிலை கொண்டிருப்பதையும் காண்கின்றோம். ஆச்சாரியாருடைய மனது கலங்கியது, அவர் சந்தேகமும் துக்கமும் படர்ந்த மனதுடன் தர்மபுத்திரரை பார்த்து கேட்டார்: ” என் மகன் உயிரோடிருக்கின்றானா , அல்லது இறந்து விட்டானா?”. ஏற்கனவே அரை மனதுடைய யுதிஷ்டிரரை ஸ்ரீகிருஷ்ணர் சொல்லி தேற்றி வைத்திருந்தார். ஆபத் தர்மத்தை பற்றி உபதேசம் செய்த கிருஷ்ணர் கூறி விட்டார். ‘ உயிரை காப்பாற்ற கூறுகின்ற பொய், உயிரை அழிப்பதற்காக கூறுகின்ற உண்மையை விட சிறந்தது. பீமன் அஸ்வத்தாமா என்ற யானையை கொன்று விட்டது உண்மையே. அந்த உண்மையை அப்படியே துரோணாச்சாரியாரிடம் கூறி பேரழிவிலுள்ள நமது அணியை காப்பாற்றவும்’. ஸ்ரீகிருஷ்ணருக்கு கட்டுப்பட்டு, யுதிஷ்டிரன், வெற்றிக்கு தடையாக உள்ள பெரும் விபத்திலிருந்து தன் அணியை காப்பாற்றும் பொருட்டு பொய் கூறினார். “அஸ்வத்தாமா கொல்லப்பட்டுவிட்டது” என உரத்த குரலில் கூறி, “அது ஒரு யானை” என்பதை தாழ்ந்த குரலில் கூறினார். துரோணருடைய மனது சுக்குநூறாக வெடித்தது.
ஆனால், இங்கேயும் காட்சி முடிந்து திரை இறங்கவில்லை. துருபத புத்திரர் த்ருஷ்டத்யும்னன் தம் முன் தலையெடுத்து நிற்கின்றான். அவனை கொன்றுவிட்டு பிறகு ஆயுதம் கீழே வைக்கலாம் என காயமடைந்த மனதுடைய துரோணர் முடிவு செய்கின்றார். அஸ்திரங்களை ஆவாகிக்கும் மந்திரங்கள் மறந்து விட்டது. மனதில் அஸ்வத்தாமாவின் உருவம் மட்டும். எனினும் அந்த போர்வீரர் விட்டுக்கொடுக்கவில்லை. அங்கிரஸ்ஸு என்ற வில்லை எடுத்தார், பிரம்மாண்டம் போன்ற உக்கிரமான சரத்தினை தொடுத்தார் ! த்ருஷ்டத்யும்ன்னனுடைய நீலக்குதிரைகள் செத்து மடிந்தது. அவருடைய வாள் துண்டு துண்டாகி விட்டது. ஆச்சாரியாருடைய பிடியில் சிக்கி விட்ட த்ருஷ்டத்யும்னனை விடுவிக்க சாத்யகி ஓடி சென்றார். யுத்தம் தொடர்ந்தது, த்ருஷ்டத்யும்னன் தோற்று விடும் என்ற நிலை உருவானது. அப்பொழுது மிகுந்த கோபத்துடன் பீமன் தமது தேரை துரோணருக்கு அருகாமையில் நிறுத்தி, நிதானமாக கூறலானார். – இந்த இடத்தில பீமனைப்பற்றி கூறிய வியாசர் பயன்படுத்திய இரண்டு வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும். மேலோட்டமாக பார்த்தால் இரண்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ‘த்ருட க்ரோத :, சனகை:’= திடமான கோபத்துடன், நிதானமாக. அதாவது உள்ளில் அடங்காத கோபம் எழுந்தபொழுதும் பல்லைக்கடித்து கொண்டு பேச வேண்டிய வார்த்தைகளில் கவனம் கொடுத்து கொண்டு என்று பொருள். பீமனுடைய உடல் அசைவுகளை பற்றி வியாசர் எதுவும் குறிப்பிடவில்லை. அது நமது கற்பனைக்கு விட்டிருக்கின்றார்.- பீமன் கூறுகின்றான்: “கர்மங்களை விடுத்து, உமர்குரிய அச்செயல்களில் திருப்தியடையாத பிராம்மண உறவினர்கள், ஆயுத பயிற்சி பெற்று போர்க்களத்தில் இறங்கி போராடாமல் இருந்தால் மட்டுமே க்ஷத்ரிய குலத்திற்கு அழிவில்லாத நிலை ஏற்படும். உயிரினங்களை துன்புறுத்தாமல் இருப்பது தான் தர்மத்தினுடைய விசாலமான கோட்பாடு. அதை பராமரித்து காப்பாற்ற வேண்டியவர்கள் பிராம்மணர்களே. தாங்கள் அதில் தலை சிறந்து விளங்கி கொண்டிருப்பவர். ஆனால், இங்கே அப்பாவி உயிர்களை கொன்றொடுக்கிக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது. தங்களை போன்று ஞானம் இல்லாத, அறிவிலிகளான எண்ணற்ற வீரர்களை, மனைவிக்காகவும் மகனுக்காகவும் பொருளுக்காகவும் ஆசைப்பட்டு சிறுபிள்ளைத்தனமாக முழு முட்டாளாக செயல்பட்டு கொன்று குவித்துக் கொண்டிருக்கிறீர்கள். யாருக்காக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ, யாருக்காக நீங்கள் ஆயுதமெடுத்து போராடுகிறீர்களோ, அவன் வீழ்ந்து விட்டான். தர்மபுத்திரரிடம் தாங்களே கேட்டு தெரிந்து கொண்டீர்களே ..ஏன் அவரையும் நீங்கள் நம்பவில்லையா ..? (துரோண பருவம்-192 /37-42)
பீமனுடைய கூர்மையான வார்த்தைகள் ஆச்சாரியாருடைய இதயத்தை தொடர்ந்து துளைத்துக் கொண்டிருந்தது.அவர் வில்லை கீழே வைத்தார் ! – உரக்க கூறினார் : ‘கர்ணா, கிருபா, துரியோதனா, இனி நீங்கள் முயற்சி செய்வீர்கள்.. நான் இதோ ஆயுதங்களை விட்டுவிட்டேன். ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் த்ருஷ்டத்யும்னன் துரோணாச்சாரியாருடைய தலையை அறுத்து கீழே வீழ்த்தி விட்டார்.
இங்கிருந்து நாம் கொஞ்சம் சற்று பின்னோக்கிப் பார்ப்போம். யுத்த ஆரம்பமாவதற்கு முன், சரியாக பதினைந்து நாட்களுக்கு முன், இதே துரோணர் இரண்டு படைகளுக்கும் மத்தியில் நின்று, தம்மிடம் ஆசி வாங்க வந்த தர்மபுத்திரரை நோக்கி கூறியதை சற்று நினைவுக்கு கொண்டு வாருங்கள்..” எனக்கு பிடிக்காத வார்த்தைகளை மிகவும் நம்பிக்கைக்குரியவரிடமிருந்து கேட்ட மாத்திரத்திலேயே நான் ஆயுதத்தை கீழே வைத்து யுத்தகளத்திலிருந்து வெளியேறுவேன். அப்பொழுது என்னை கொன்று விடலாம்’. ஆனால் அவ்வாறு நடந்ததா? இல்லையென நமக்கு தெளிவாக தெரியும். ஒருமுறை அல்ல இருமுறையும் அல்ல, நான்கு முறை துரோணர் தனக்கு பிடிக்காத செய்தியை கேள்வியுற்றார். நான்காவது முறை பீமசேனன் மிக கூர்மையாக கூறிய பிறகே ஆயுதத்தை கைவிட்டார். முதன் முறையாக அஸ்வத்தாமா இறந்துவிட்ட செய்தியை பீமன் துரோணருக்கு தெரிவித்தார்., ஓரிரு நிமிடங்கள் மனசஞ்சலம் கொண்டவரான துரோணர், மீண்டும் போரில் முழுவீச்சில் ஈடுபட்டார். இந்த செய்தியை முதலில் தெரியப்படுத்திய பீமன் ஒரு வேளை, ஆச்சரியாரை பொறுத்தமட்டில், நம்பிக்கைக்குரியவரும், மதிப்பிற்குரியவருமாக இல்லாமல் இருந்திருக்கலாம். அதை கேள்விப்பட்ட துரோணர் தமது யுத்தம் செய்யும் வேகத்தை அதிகப்படுத்தினார். மிகுந்த கோபத்துடன் எதிரணியினரை கொன்றொடுக்கினார்! அதை கட்டுப்படுத்தும் பொருட்டு தேவலோக ரிஷிகள் நேராக துரோணர் முன் தோன்றி அவரை எச்சரித்தார்கள். அந்த கூட்டத்தில் துரோணருடைய தந்தை பரத்துவாஜ முனிவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. துரோணருடைய செயல்களை பாவச் செயல்கள் என அவர்கள் கண்டனம் செய்தனர். பீமன் கூறியதை போன்று அஸ்வத்தாமா விஷயத்தை அவர்கள் கூறவில்லைதான். எனினும் கர்ம காண்டத்தை பற்றி கூறி, துரோணரை விழிப்படையச் செய்தார்கள். இப்படிப்பட்ட பாவச்செயலிலிருந்து உடனடியாக பின்வாங்கும் படி அவர்கள் வற்புறுத்தினார்கள். அப்பொழுதும் கூட தர்மபுத்திரரிடம் ஏற்கனவே தெரிவித்ததை போன்று துரோணர் ஆயுதங்களை கைவிடவில்லை! மூன்றாவதாக, துரோணருடைய சந்தேகத்திற்கு பதிலளிப்பவராக தர்மபுத்திரர், அந்த பிடிக்காத செய்தியை ஒருமுறை கூறி உறுதிப் படுத்தினார்; அதைகேள்விப்பட்ட துரோணருடையமனது சுக்குநூறாக வெடித்தது, அவருடைய ஞாபக சக்தி மங்கி விட்டது. மந்திரங்கள் மறந்து விட்டது. இருப்பினும் ஓய்வு பெற்ற அரசாங்க பணியாளர், தாம் வங்கியில் வைத்துள்ள வைப்பு நிதியின் வட்டியை வாங்கி செலவுகளை சமாளிப்பதைப் போன்று த்ருஷ்டத்யும்னரை எதிர்த்து ஆவேசமாக போரிட்டு, அவரை நிலைகுலையச் செய்தார். இதைக் கண்ட பீமன் எப்படியாவது துரோணரை அடக்கியாக வேண்டுமென தேரினை அவருக்கருகாமையில் நிறுத்தி, அவருடைய காதில் விழும் வகையில் அந்த படிக்காத செய்தியை சற்று கடுமையாக கூறுகின்றார். ‘தர்மபுத்திரர் மீது கூட உங்களுக்கு நம்பிக்கையில்லையா?’ என்ற கூர்மையான சொற்கள் அவருடைய இதயத்தில் குத்தியதும், ஆயுதத்தை கீழே வைத்தார்.
இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்…