மகாதேவ் சூதாட்ட செயலியின் நிறுவனர்களான ரவி உப்பால் மற்றும் சவுரப் சந்திரகரை துபாய் காவல் துறை கடந்த மாதம் கைது செய்தது. இதையடுத்து அவர்களை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் அமலாக்கத் துறை இறங்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது, 1800 பக்கம் கொண்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை ராய்ப்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்தப் புதிய குற்றப்பத்திரிகை துபாய் அதிகாரிகளுடன் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், கூரியர் பணியில் ஈடுபட்ட அஸிம் தாஸ், காவல் துறை அதிகாரி பீம் சிங் யாதவ், சூதாட்ட செயலி தொடர்புடைய சுபகாம் சோனி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் அஸிம் தாஸ் மற்றும் பீம் சிங் யாதவ் இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் இருவர் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர்.
இந்தச் செயலி மூலம் தினமும்ரூ.200 கோடி லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசுஅதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர். சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இவர்கள் ரூ.508 கோடி வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. கடந்த பிப்ரவரியில் சவுரப்சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் பாலிவுட் நடிகர்,நடிகைகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை வழங்கப்பட்டதாகாவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை 6 பேரை கைது செய்திருந்தது. ரவி உப்பாலையும் சவுரப் சந்திரகரையும் வலை வீசி தேடிவந்த நிலையில் இருவரும் துபாயில் கைது செய்யப்பட்டனர்.