போலீஸ் உதவியில்லாமல் கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை ஒத்தக்கடை யானைமலை ஐயப்பன் நகர் பகுதியில் கடந்த ஏப்- 22ம் தேதி 7 நபர்கள் போதை பொருட்கள் மற்றும் மது அருந்திய நிலையில், அப்பகுதியில் பிரச்சனை செய்தனர். அவர்கள் கான்முகமது என்பவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை காவல்துறையினருக்கு தெரிந்தே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை. எனவே ஒத்தக்கடை ஐயப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கவும், போதை பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “ஒத்தக்கடையில் நடைபெற்ற சம்பவம் கஞ்சா பயன்பாடு காரணமாக நடைபெறவில்லை. மது அருந்தியவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 2486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒத்தக்கடை சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “காவல்துறையினரின் உதவி இன்றி கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?. எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது?. எத்தனை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக உள்துறை செயலர், டிஜிபி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை மே 15-க்கு ஒத்திவைத்தனர்.