போராட்டக் கொட்டகைகளை அகற்ற உத்தரவு

விழிஞ்சம் துறைமுக கட்டுமானத்துக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக லத்தீன் கிறிஸ்தவ பேராயரால் அமைக்கப்பட்ட கொட்டகைகளை இடிக்க போராட்டக் குழுவினருக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. போராட்டத்திற்கு எதிராக அதானி குழுமம் தாக்கல் செய்த மனுவில், ‘போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்ட கொட்டகைகள் கட்டுமானப் பகுதிக்குள் நுழைவதற்கு இடையூறாக உள்ளது. துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்து, துறைமுகத்துக்கு காவல்துறை பாதுகாப்பை அளிக்க உத்தரவிட்டது. ஆனால், போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளால் பணிகள் தடைபடுகின்றன’ என அதானி குழுமம் புகார் கூறியுள்ளது. மேலும், காவல்துறையின் செயலற்ற தன்மை மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை காவல்துறை பின்பற்றத் தயங்குவதையும் சுட்டிக்காட்டி இது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்தது. காவல்துறை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆனால் போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்ட கொட்டகைகள், துறைமுக நிர்மாணத்திற்கு தடையாக தொடர்வதை சுட்டிக்காட்டி காவல்துறையை கடிந்துகொண்ட நீதிபதிகள், கொட்டகைகளை இடித்து அகற்ற உத்தரவிட்டனர்.