அஸ்ஸாமில் சமீபத்தில் நிகழ்ந்த பாகுரும்பா த்வோ (Bagurumba Dwhou), போடோ சமூகத்தின் செழுமையான பண்பாட்டு மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தைத் தெய்வீகத் திருவிழாவாகக் கொண்டாடும் ஒரு மாபெரும் நிகழ்வாக இருந்தது.
பல வண்ணங்களின் அழகு, தாளமிகு அசைவுகள், வாழும் மரபுகள் ஒன்றிணைந்து கண்கவர் பண்பாட்டுக் காட்சியாக அது மலர்ந்தது. “கச்சாரிகள்” (அஸ்ஸாமில் உள்ள பல இனக்குழுக்களுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயர்) எனப்படும் பெரும் இனக்கூட்டமைப்பின் 18 உப-இனக்குழுக்களில் மிகப்பெரிய ஒன்றாக விளங்கும் போடோக்கள், வரலாற்று ரீதியாகப் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் பூர்வீகக் குடிகளாக இருந்து, நேபாளம் மற்றும் வடகிழக்கு முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக உடல்குரி, கொக்கிராஜ்ஹார், பாக்சா, சிராங், போங்கைகான், நல்பாரி, தர்ராங், சோனிட்பூர் ஆகிய அஸ்ஸாமின் வடமேற்குப் பகுதிகளில் அவர்கள் பெரும்பாலும் குடியிருக்கின்றனர்.
அரசின் அட்டவணை மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போடோ மொழியை அவர்கள் பேசுகின்றனர். விவசாயம் அவர்களின் முதன்மைத் தொழிலாகும். கூடுதலாக, தேயிலைத் தோட்டப் பணிகள், பன்றி மற்றும் கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, நெய்தல் போன்ற தொழில்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

2026 ஜனவரி 17ஆம் தேதி, பாகுரும்பா இதுவரை இல்லாத அளவிலான பெருமையுடன் நிகழ்த்தப்பட்டது. 10,000 போடோ இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் பண்பாட்டு அடையாளத்தை உயிர்ப்புடன் வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, அஸ்ஸாம் மாநில அரசின் ஏற்பாட்டில், முதல்வர் டாக்டர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் நடத்தப்பட்டது.
குவாஹாத்தியில் உள்ள சருசஜாய் அர்ஜுனா போகேஸ்வர் பாருவா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்றதனால், வரலாற்றுச் சிறப்பை பெற்றது.
போடோலாந்து பிராந்திய கவுன்சில் (BTC) எல்லைக்குள் மட்டுமன்றி, அதற்கு வெளியேயுள்ள மாவட்டங்களையும் உள்ளடக்கி, அஸ்ஸாமின் 23 மாவட்டங்களில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். மேலும், நேபாளம், மேற்கு வங்காளம், நாகாலாந்து ஆகிய இடங்களிலிருந்தும் கலைஞர்கள் கலந்து கொண்டு, இந்த உலகச் சாதனை முயற்சிக்கு சர்வதேசப் பரிமாணம் வழங்கினர்.
இந்நிகழ்வு பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றியது. பண்பாட்டு ரீதியாக, போடோ பாரம்பரியத்தை தேசிய மேடையில் உயர்த்தியது; அரசியல் மற்றும் சமூக ரீதியாக, கிளர்ச்சியிலிருந்து அமைதிக்குப் பயணித்த அஸ்ஸாமின் மாற்றத்தை, மோதலிலிருந்து பண்பாட்டு தன்னம்பிக்கைக்கான நகர்வை உறுதிப்படுத்தியது.
பல தசாப்தங்களாக அரசியல் குழப்பங்களையும், தன்னாட்சிக் கோரிக்கைகளால் உருவான கிளர்ச்சி மற்றும் பிரிவினைச் சுழற்சிகளையும் அனுபவித்த போடோ சமூகத்தின் பின்னணியில், ஆயுதமேந்திய தேசிய ஜனநாயக முனை (NDFB) அமைப்பின் அனைத்து பிரிவுகளுடனும், சமூகத் தலைவர்களுடனும் கையெழுத்தான 2020 போடோ அமைதி உடன்படிக்கை, வரலாற்றில் ஒரு தீர்மானமான திருப்புமுனையாக அமைந்தது. இந்த உடன்படிக்கை, செயலில் இருந்த ஆயுத மோதல்களுக்கு முடிவுகட்டியதோடு மட்டுமல்லாமல், காடுகளில் வாழ்ந்து வந்த ஒரு முழு தலைமுறை போடோ இளைஞர்கள், மீண்டும் சமூகத்தின் பிரதான ஓட்டத்தில் இணைந்து, ஜனநாயக மற்றும் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதற்கான வாயில்களையும் திறந்தது.
குறிப்பாக 2021, முதல்வர் டாக்டர் ஹிமந்த பிஸ்வசர்மா பொறுப்பேற்றதிலிருந்து, அஸ்ஸாமில் அமைதி உறுதி படுத்தப்பட்டுள்ளது. போடோ, கார்பி, ஆதிவாசி, தேயிலைத் தொழிலாளர் மற்றும் திமாசா சமூகங்களைச் சேர்ந்த பல பயங்கரமான ஆயுதக்குழுக்கள், ஆயுதங்களை கைவிட்டுள்ளன.
இச்சரணடைவுகள் தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல; அரசின் திட்டமிட்ட அமைதி கட்டமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகவே நிகழ்ந்தவை. 11,000க்கும் மேற்பட்ட முன்னாள் ஆயுதப் போராளிகள், நிதி உதவி, வாழ்வாதார ஆதரவு, சமூக கண்காணிப்பு போன்ற மறுவாழ்வு கொள்கைகள் மூலம் நலப்படுத்தப்பட்டுள்ளனர்.
ULFA (Independent) தவிர, அஸ்ஸாமில் உள்ள பெரும்பாலான ஆயுத அமைப்புகள் அமைதி செயல்முறையில் இணைந்துள்ளன.
இதன் விளைவாக, ஆயுத வன்முறைகள் கணிசமாக குறைந்துள்ளன; ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், 1958 (AFSPA) பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களும், பண்பாட்டு வெளிப்பாடுகளும் சுதந்திரமாக நடைபெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல ஆண்டுகளாக செய்த உழைப்பின் பலன் இதுவாகும். ஆயுதக்குழுக்களுக்கு எதிரான திடமான நடவடிக்கைகள், சரணடைய விரும்புவோருக்கான அமைதி முன்மொழிவுகள், வன்முறையை நிராகரிக்கும் சமூக அடிப்படையிலான பிரச்சாரங்கள், இவையனைத்தையும் இணைத்து, அஸ்ஸாமில் கிளர்ச்சியை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர, எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது.
இந்த மாற்றத்தை போடோ சமூகம் முழுமையாக ஆதரித்து வரவேற்றது. இச்சூழலில், சிபுங்க் (Sifung) பண்பாட்டு குழு பாகுரும்பா நடனத்தை மையமாகக் கொண்டு, போடோ பண்பாட்டின் மீளுருவாக்கம் குறிப்பிடத்தக்கது.
முறையான பயிற்சிகள், சமூக அடிப்படையிலான பணிமனைகள், வழக்கமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம், போடோ இளைஞர்களை தங்கள் தர்மம் சார்ந்த பண்பாட்டு வேர்களுடன் மீண்டும் இணைக்கும் முக்கிய சக்தியாக அந்தக் குழு உருவெடுத்துள்ளது.
கிறிஸ்தவ மிஷனரி மாஃபியா, போடோக்களிடையே தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயலும் இக்காலகட்டத்தில், அந்தக் குழு பாகுரும்பாவுக்குரிய பாரம்பரிய தாளங்கள், உடைகள், அசைவுகளை மீட்டெடுத்ததோடு, கிராம எல்லைகளைத் தாண்டி, தேசிய மற்றும் சர்வதேச மேடைகளிலும் அந்த நடனத்தை கொண்டு சென்று, அதற்கு அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.
ஒருகாலத்தில் முடிவில்லாத ரத்தப்பாய்ச்சலும், வன்முறையும் நிறைந்த பகுதியாக இருந்த பிராந்தியம், இன்று அஸ்ஸாமின் பண்பாட்டு மற்றும் வளர்ச்சிசார் உரையாடல்களில் முக்கியப் பங்காற்றி வருகிறது. கல்வி, உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்புகள் ஆகியவை மாவட்டமெங்கும் விரிவடைந்து வருகின்றன.
கல்வி, கலை, நிர்வாகம் போன்ற துறைகளில் போடோ இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகின்றன. இந்த முன்னேற்றத்தைத் தெளிவாக பிரதிபலிக்கிறது, பாகுரும்பாத்வோவின் மாபெரும் நிகழ்ச்சி.
போடோக்களின் தன்னம்பிக்கை, பெருமை, ஒழுக்கம் ஆகியவற்றை இது வெளிப்படுத்தியது. நயமான நடன அமைப்புகள், இயற்கை கருப்பொருள்கள், பூர்வீக இசைக்கருவிகளின் காட்சிப்படுத்தல் போன்றவை பாரதத்தின் நாட்டுப்புற மரபுகளுக்கு ஆழம் சேர்த்ததோடு, பாகுரும்பாவிற்கு கண்ணியமும், கௌரவமும் வழங்கின.
கட்டுரையாளர்: டாக்டர் அங்கிதா தத்தா
வடகிழக்கு பாரத ஆராய்ச்சியாளர்
தமிழில்: திவ்யா இரா.கு, முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னை