பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு: 2 நாளில் 42,000 மாணவர்கள் விண்ணப்பம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைசாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்பட உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-ம் தேதி தொடங்கியது. இதுவரை 42,114 மாணவர்கள் (நேற்று மாலை 6 மணி நிலவரப்படி) பதிவு செய்துள்ளனர். அதில் 16,180 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்‌. இணைய வசதியில்லாதவர்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 01800-425-0110, tneacare@gmail.com மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.