பொருளாதார நிபுணர்களோடு கலந்துரையாடல்

நிதி ஆயோக்கில் பொருளாதார நிபுணர்களோடு நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். ‘இந்தியாவின் வளர்ச்சி மற்றும் உலகளவிலான பிரச்னைகளில் இருந்து மீள்வது தொடர்பான நடவடிக்கைகள்’ என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில்பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன. இதில் பேசிய பிரதமர், “பிரச்சனைகள் இருந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு புதிய பன்முகத்தன்மை கொண்ட வாய்ப்புகள் குறிப்பாக டிஜிட்டல், எரிசக்தி, சுகாதாரம் மற்றும் வேளாண்மை துறைகளில் இருந்து வருகிறது. இந்த வாய்ப்புகளை அரசு மற்றும் தனியார் துறையினர் இணைந்து பயன்படுத்த வேண்டியது அவசியம். புத்தாக்க சிந்தனையுடன் நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். பாரதத்தின் டிஜிட்டல் துறை வெற்றிகளை பெற்று வருகிறது. நாடு தழுவிய அளவில் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உருவாக்கும் திறனை நாம் அடையவேண்டும். குறிப்பாக மகளிர் சக்தி இயக்கம் பாரதத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. பெண்களின் பங்களிப்பை நாம் மேலும் ஊக்குவிக்க வேண்டும். சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி, சிறுதானியங்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதன் விளைவாக கிராமப்புற மற்றும் வேளாண் துறையை மேம்படுத்த முடியும்” என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். பிரதமருடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். உலக அளவில் பிரச்சினைகள் தொடரும் நிலையில், அதிலிருந்து மீ்ள்வதற்கான பாரதத்தின் முயற்சிகளை மேம்படுத்தும் மிக முக்கிய ஆலோசனைகளும் விவாதிக்கப்பட்டது. அப்போது, இத்தகைய நடவடிக்கைகள் மூலமே உலக அளவில் பாரதத்துக்கு என தனித்துவமான இடம் உள்ளது. அனைத்துத் துறைகளிலும் சிறந்த மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். பொருளாதார நிபுணர்கள் தெரிவித்த மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி கூறிய பிரதமர் நமது நாட்டின் வளர்ச்சிக்கு இது போன்ற முக்கிய அணுகுமுறைகள் மிக முக்கிய பங்காற்றும் என்றார். மத்திய நிதியமைச்சர், மத்திய திட்ட அமலாக்க இணையமைச்சர், நிதி ஆயோக் துணைத் தலைவர், பிரதமரின் முதன்மைச் செயலர், நிதி ஆயோக் உறுப்பினர்கள் அமைச்சரவை செயலர், தலைமைப் பொருளாதார ஆலோசகரும், நிதி ஆயோக்கின் தலைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.