பொய்களை பரப்பும் காங்கிரஸ்: ராமரை தரிசித்த பின் அனுராக் தாக்கூர் பேட்டி

 

தேர்தல் நேரத்தில் பொய்களை பரப்பும் வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழிபாடு செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: 500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்தனர்.

ராமரை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. திரவுபதி முர்மு நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதை காங்கிரசார் எதிர்த்தனர். தேர்தல் நேரத்தில் பொய்களை பரப்பும் வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, உ.பி விமான நிலையத்தில் அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது அல்லது இடஒதுக்கீடு பா.ஜ., அரசால் பறிக்கப்படும் என காங்கிரசார் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் வதந்திகளை பரப்புகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் எமர்ஜென்சியை அமல்படுத்தி ஜனநாயகம் முடிவுக்கு வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.