பொன்முடி மீதான வழக்கில் உதவ அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுவை ஏற்றது நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி: அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு சாட்சிகள், தொடர்ந்து பிறழ் சாட்சியமளித்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அதிமுக சார்பில் தங்களை அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது.

ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு: கடந்த 2006-2011 ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாக கனிமவளத் துறையையும் கவனித்து வந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கவுதமசிகாமணி, கோதகுமார், கோபிநாத், ராஜமகேந்திரன், சதானந்தன், ஜெயச்சந்திரன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின்போது லோகநாதன் என்பவர் உயிரிழந்து விட்டார்.

பிறழ் சாட்சி: இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி வரை மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஓய்வு பெற்ற வட்டாட்சியர், நில அளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர், கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குநர் என 9 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியமளித்தனர். இருவர் மட்டுமே முறையான சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்கள் தொடர்ந்து பிறழ் சாட்சிகளாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அதிமுக சார்பில் தங்களையும் அனுமதிக்கக் கோரி, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சார்பில், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அரசு வழக்கறிஞர் சீனிவாசன் செப்.8-ம் தேதி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஏற்றுக் கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்டம்பர் 25-ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.