சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதற்கு எதிராக அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக உள்ள பொன்முடி, கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட 5 பேர் மீதும் கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, பின்னர் வேலூர் முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்ட அனைவரும் கடந்த ஜூன் 28-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆக.10-ம் தேதி தானாக முன்வந்து வழக்காக (‘சூமோட்டோ’) எடுத்து விசாரித்தார். அப்போது, ‘‘இந்த வழக்கு மிக மோசமாக கையாளப்பட்டுள்ளது. ஒரு நீதிமன்றத்தில் இருந்து இன்னொரு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியபோது, உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை’’ என்று அவர் கருத்து தெரிவித்தார். இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை, அமைச்சர் பொன்முடி தரப்பில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை கிளைக்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கை நீதிபதி என்.ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார்.
இதற்கிடையே, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு விசாரணைக்கு எதிராக அமைச்சர் பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது சரிதான். அவரைப் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க தடை இல்லை. அதற்கு தடை கோரிய மனுவை ஏற்க முடியாது. அதை தள்ளுபடி செய்கிறோம். இதில் மனுதாரருக்கு ஏதேனும் குறை இருந்தால், தனி நீதிபதி முன்பு வழக்கு விசாரணைக்கு வரும்போது முறையிடலாம்.