ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைய உங்கள் (மக்கள்) அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற வந்துள்ளேன். வலிமையான இந்தியா, வளர்ந்த இந்தியா, வளர்ந்த ஹிமாச்சல பிரதேசத்தை உருவாக்க உங்கள் ஆசிகள் வேண்டும். ஐந்து கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டது; இப்போதே பா.ஜ., – தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதியாகிவிட்டது.
ஹிமாச்சலின் உயரமான மலைகள் என் மனதை உயர்வாக வைத்திருக்க கற்றுக் கொடுத்தன, பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்க கற்றுக் கொடுத்தன. பாரத அன்னையை இழிவுபடுத்துவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், பாரத அன்னையை அவமதிப்பதை காங்கிரஸ் நிறுத்தவில்லை. ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்வதிலும், ‘வந்தே மாதரம்’ என்று சொல்வதிலும் காங்கிரசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அப்படிப்பட்ட காங்கிரசால் ஹிமாச்சல பிரதேசத்திற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.
காங்கிரஸ் காலத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். பலவீனமான அரசாங்கமாக அது இருந்தது. அதனை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது. பலவீனமான காங்கிரஸ் அரசு உலகம் முழுவதும் உதவி கேட்டு அலைந்தது. ஆனால், இந்தியா இனி உலகத்திடம் பிச்சை எடுக்காது; இந்தியா சொந்தமாகப் போரிடும்.
பொதுப் பிரிவிலும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை 60 ஆண்டுகளாக காங்கிரஸ் சிந்தித்துக்கூட பார்க்கவில்லை. அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை. நான் பொதுப்பிரிவில் உள்ள ஏழை மக்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினேன். இதன்மூலம் பல்வேறு துறைகளில் அவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. ஒரு பக்கம் மோடியின் கியாரன்டியும், மற்றொரு பக்கம் காங்கிரசின் அழிவு மாடலும் இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்க, ஹிமாச்சல் மக்களிடம் காங்கிரஸ் நிறைய பொய்களைச் சொன்னது. இண்டியா கூட்டணியின் சதிக்கு சமீபத்திய உதாரணம், மேற்கு வங்கத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, கோல்கட்டா உயர் நீதிமன்றம் பல முஸ்லிம் சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
இண்டியா கூட்டணியால் பல முஸ்லிம் சாதிகள், ஓபிசி ஆக்கப்பட்டு அவர்களுக்கு ஓபிசி உரிமைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், இண்டியா கூட்டணி, ஓபிசி.,களின் உரிமைகளை பறித்தது மற்றும் அரசியலமைப்பை மீறியது தெளிவாகியுள்ளது. கோல்கட்டா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, இண்டியா கூட்டணி கட்சிகள் பீதியில் உள்ளனர். மேற்குவங்க முதல்வர், நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுக்கிறார். அவர்களுக்கு அரசியல் சாசனமும் நீதிமன்றமும் முக்கியமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.