பொதுத்தேர்வில் தொடர்ந்து அசத்திய பார்வை மாற்றுத்திறனாளி சகோதரியர்

மணலி, பல்ஜி பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், பொக்லைன் வாகன உதிரி பாகங்கள் விற்பனையகம் வைத்துள்ளார். இவரது மனைவி டில்லிராணி. இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.  மகள்கள் ஹேமதாரணி மற்றும் ஹேமஸ்ரீ, இரட்டையர் ஆவர். பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளான இருவரும், தேனாம்பேட்டை, சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில், பிளஸ் 2 படித்து தேர்வெழுதினர்.

‘பிரெய்லி’ முறையில் படித்து, தேர்வை எதிர்கொண்ட நிலையில், ஹேமதாரணி, கணினி அறிவியலில் 100க்கு 100 எடுத்தார். தமிழ், புவியியல், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களில், 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில், 73 என, 569 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

ஹேமஸ்ரீ, கணினி அறிவியல், புவியியல், பொருளியல் ஆகிய பாடங்களில், 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வரலாற்று பாடத்தில் 98, தமிழில் 92, ஆங்கிலத்தில் 79, உட்பட, 566 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியில் மூன்றாமிடம் பிடித்தார். ஹேமஸ்ரீ 10ம் வகுப்பில் 452 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடமும் பிடித்திருந்தார். அதே போல், ஹேமதாரணி பத்தாம் வகுப்பில் 449 மதிப்பெண்கள் எடுத்து, இரண்டாமிடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது. கல்விக்கண்ணால் பெரும் சாதனை படைத்திருக்கும் இரட்டை சகோதரியர், இருவருமே எதிர்காலத்தில், பி.ஏ., ஆங்கிலம் படித்து, ஐ.எப்.எஸ்., அதிகாரியாக வேண்டும் என, விருப்பம் தெரிவித்து உள்ளனர்.