பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி

மக்களின் வரிப்பணம் ரூ. 81 கோடியை செலவு செய்து மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தி.மு.க அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. பிறகு கண்துடைப்பு கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பல கட்சிகள், அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பெரும்பலானோர் சம்மதித்தனர் என கூறி நினைவுச் சின்னத்திற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை கடிதம் அனுப்பியது. இந்த சூழலில், மத்திய வனம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் பேனா நினைவுச் சின்னம் அமைக்க, நினைவுச் சின்னத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. ஆமை இனப்பெருக்க காலத்தில் நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. தேசிய கடலோரா ஆராய்ச்சி மையம் மண் அரிப்பு, மணல் திரட்சி உள்ளிட்டவை குறித்து கண்காணிக்க வேண்டும்.  நினைவுச் சின்னத்திலிருந்து சாலை இணைப்பு, போக்குவரத்து மேலாண்மை, அவசரகால பாதுகாப்பு திட்டம் ஆகியவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போலவே சிறிதும் மாற்றமின்றி பின்பற்றப்பட வேண்டும். இதில், ஏதேனும் தவறான, போலியான தகவல் இருப்பது தெரியவந்தால் எந்த நேரத்திலும் அனுமதி வாபஸ் பெறப்படும் என்பது உள்ளிட்ட 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.