பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஹெரிட்டேஜ் வீதியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு ஒன்று வெடித்தது. கடந்த 5 நாட்களில் அப்பகுதியில் நடந்த முன்றாவதுது குண்டுவெடிப்பு சம்பவம் இது. இது தொடர்பாக 5 பேரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் மாநில டி.ஜி.பி கௌரவ் யாதவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “அமிர்தசரஸில் நடந்த குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவர்” என்று தெரிவித்தார். முதல் குண்டுவெடிப்பு கடந்த மே 6ம் தேதியும் 2வது குண்டு வெடிப்பு கடந்த 8ம் தேதியும், 3ம் குண்டு வெடிப்பு 11ம் தேதியும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உலகப்புகழ் பெற்ற பொற்கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்திலேயே நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக பஞ்சாப் காவல்துறையுடன் இணைந்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.