தஞ்சை பெரிய கோவிலை, ‘யுனெஸ்கோ’ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. கோவில் பராமரிப்பு மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். கோவிலில் பாதுகாப்புக்கு, மத்திய அரசு சார்பில், தனியார் நிறுவன காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில் நுழைவுவாயிலில், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இந்நிலையில், கோவில் வெளியிலும், உள்ளேயும் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் காட்சி பொருட்களாக உள்ளன. சில கேமராக்களில் ஒயர்கள் கூட இல்லாமல், வெறும் கேமரா மட்டுமே உள்ளது. இதை மத்திய தொல்லியல் துறையினர் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தஞ்சாவூர் பெரியகோவில் மற்றும் கோவில்களின் வளர்ச்சி கூட்டமைப்பினர் கூறியதாவது:
கோவில் கும்பாபிஷேகத்தின் போது, மராட்டா கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் கோபுரம், திருச்சுற்று மாளிகை, கோவில் சுற்றுப்பிரகாரம் என, கோவில் முழுதையும் கண்காணிக்கும் வகையில், 32 இடங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டன.
ஆனால், தற்போது பல ‘சிசிடிவி’ கேமராக்கள் தரையை பார்த்தப்படியும், ஒயர்கள் இல்லாமலும், செயல்படாமலும் வெறும் காட்சிப்பொருளாக இருக்கின்றன. கண்காணிப்பு பணிகளில் தொய்வு இருப்பதால், சிலர் சிற்பங்கள், ஓவியங்களில் கிறுக்கி வருகின்றனர். கோவிலில் பொருட்களை யாரும் தொலைத்து விட்டாலும் கண்டுபிடிப்பது சிரமம் தான். மத்திய தொல்லியல் துறை இதற்கு தீர்வு காண வேண்டும்.