பெண்களை மிரட்டும் குண்டர்கள்; திரிணமுல் மீது பிரதமர் ஆவேசம்

மேற்கு வங்கத்தில் உள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக, வரும் ஜூன் 1 வரை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று எட்டு தொகுதிகளுக்கு நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், ஐந்தாம் கட்ட தேர்தல் நடக்க உள்ள பராக்பூர், ஹூக்ளி தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில் சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கு திரிணமுல் காங்கிரஸ் என்ன செய்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். முதலில் அங்கு தப்பு செய்த குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற போலீசார், தற்போது புதிய ஆட்டங்களை துவங்கியுள்ளனர். அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்களை போலீசார் உதவியுடன் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த குண்டர்கள் மிரட்டுகின்றனர்.

அடக்குமுறையாளரான திரிணமுல் கட்சி நிர்வாகி ஷாஜஹானை காப்பாற்றவும், சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும், தங்களால் முடிந்த அளவு திரிணமுல் காங்கிரசார் முயற்சிக்கின்றனர்.

அவர்களை பார்த்து பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்த விவகாரத்தில் திரிணமுல் காங்., எத்தனை தந்திரங்களை பயன்படுத்தினாலும், அடக்குமுறையாளர்கள் யாரும் தப்ப முடியாது. திரிணமுல் காங்., ஆட்சியில் மேற்கு வங்கம், ஊழலின் மையமாக மாறியுள்ளது. வெடிகுண்டு தயாரிப்பு இங்கு குடிசைத் தொழிலாக மாறிவிட்டது. ஊடுருவல்காரர்கள் ஆளுங்கட்சியினர் உதவியுடன் அத்துமீறத் துவங்கிவிட்டனர். மொத்தத்தில் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு கெட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில், பல பொய்யான தகவல்களை திரிணமுல் காங்கிரஸ் பரப்புகிறது. மேற்கு வங்க மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை தருகிறேன். மதத்தின் அடிப்படையில் யாரும் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., இட ஒதுக்கீடு மீது யாரும் கை வைக்க முடியாது.

ராம நவமி கொண்டாடுவதை யாராலும் தடுக்க முடியாது. ராமர் கோவிலை அப்புறப்படுத்த முடியாது. சி.ஏ.ஏ., அமலாக்கத்தை யாராலும் தடுக்க முடியாது என வாக்குறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.